FACT CHECK: திருமாவளவன் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

திருமாவளவன் மறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விஷமத்தனமான பதிவு என்பதால் அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இந்த பதிவை 2018ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வீரதேவேந்திரன் கண்டமணூர் என்பவர் பதிவேற்றியுள்ளார். தற்போதும் இந்த பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

தங்களுக்குப் பிடிக்காத தலைவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி பதிவுகளை பரப்புவது தமிழக அரசியலில் வாடிக்கையாக உள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த் என பலருக்கும் அவ்வப்போது இது போன்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் பகிரப்பட்டு வந்துள்ளன.

கோவில் பற்றி பேசிவிட்டார் என்று நடிகை ஜோதிகாவுக்கும் கூட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதாமங்கேஷ்கருக்குக் கூட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பரப்பப்பட்டது. நல்ல வேளையாக அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று பேசிய திருமாவளவனுக்கு எதிராக தீவிர வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இது 2018ம் ஆண்டு போடப்பட்ட பதிவாகும். தற்போது வைரல் ஆகி வருகிறது. பலரும் 2020 அக்டோபர் 31, நவம்பர் 1ல் பகிர்ந்து வருகின்றனர்.

பதிவு போட்டதற்கு பிறகு 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் எம்.பி-ஆகவே ஆகிவிட்டார். நாம் இந்த கட்டுரையை வெளியிட்ட 2020 நவம்பர் 2ம் தேதி கூட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது தொடர்பான வீடியோக்களை அவர் வெளியிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தற்போது திருமாவளவன் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா பேசினார். “ஆரோக்கியமாக இருக்கிறார். சாதாரண காய்ச்சல், சளி போன்ற பிரச்னை கூட இன்று மக்கள் பணியாற்றி வருகிறார்.  முழு ஆரோக்கியத்துடன் உள்ளார். இது விஷமிகள் கிளப்பிட்ட வதந்தி” என்றார்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு தற்போது வைரலாக பகிரப்பட்டு வந்தாலும், உண்மையில் 2018ம் ஆண்டு இது வெளியிடப்பட்டுள்ளது.

திருமாவளவன் நலமுடன் உள்ளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கௌதம சன்னா உறுதி செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் இந்த பதிவு விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் திருமாவளவன் மரணமடைந்துவிட்டார் என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பப்பட்டு வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திருமாவளவன் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False