
உள்ளாட்சித் தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும். 2022 பிப்ரவரி 19ஆம் தேதி நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகவும் பின்னடைவை சந்திக்க உள்ளது. ஆளும் கட்சி உள்ளாட்சி தேர்தலில் பின்னடைவை சந்திப்பது இதுவே முதல் முறை என லையோலா கல்லூரி கருத்து கணிப்பில் கூறப்பட்டனர்” என்று இருந்தது.
இந்த பதிவை Sv Jagadeesh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தி.மு.க மிகப்பெரிய தோல்வியை அடையும் என்று லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்ததாக நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. லயோலா கல்லூரி சமீப காலங்களில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் லயோலா கல்லூரி பெயரில் கருத்துக் கணிப்பு வெளியானது. ஆனால், அதற்கு லயோலா கல்லூரி மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தோல்வி அடையும் என்று லயோலா கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக நியூஸ் கார்டு பகிரப்படுகிறது. உண்மையில் லயோலா கல்லூரி இப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தால் அது பெரிய செய்தியாக வந்திருக்கும். ஆனால், தி.மு.க எதிர்ப்பு ஊடகங்களிலும் கூட அப்படி ஒரு செய்தியும் இல்லை. எனவே, இது போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. இந்த நியூஸ்கார்டில் உள்ள புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தேடிப் பார்த்தோம். 2015ம் ஆண்டு இந்த படத்தை டெக்கான் கிரானிக்கில் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

அந்த நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட், வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், லொயோலா கல்லூரியை ஊடகங்கள் பெரும்பாலும் இலயோலா கல்லூரி அல்லது லயோலா கல்லூரி என்றே அழைக்கும். ஆனால், இந்த நியூஸ் கார்டில் லையோலா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது என்பதற்கு பதில் கூறப்பட்டனர் என்று பிழையாக இருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.
ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய, பிப்ரவரி 16ம் தேதி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. இது தொடர்பாக தந்தி டிவி டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் இது போலியானது என்று உறுதி செய்தனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
