
ஆம்ஸ்ட்ராங் இறப்பை வைத்து ஆதாயம் அடைய வேண்டாம் என்று அவரது மனைவியை மறைமுகமாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மாயாவதி மற்றும் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் புகைப்படங்களை வைத்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆம்ஸ்ட்ராங் இறப்பை வைத்து ஆதாயம் அடைய வேண்டாம் 2024 ஜீலை மாதம் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு தலைவரும் என் தம்பியும் ஆகிய திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். படுகொலையே செய்த நபர்களிடமே ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நெருங்கிய ஒருவர் ஆதரவு தெரிவித்து ஆதாயம் அடைய நினைக்கிறார். அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் அந்த நபரை தேர்தலில் விரட்டி அடிப்போம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் BSP தலைவர் மாயாவதி ஆவேசம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவி பொற்கொடி அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேட்டி அளித்தது போன்று நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் தந்த டிவி வழக்கமாக வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டுகளில் தேதியைக் குறிப்பிடுவார்கள். ஆனால் இதில் தேதி இல்லை. மேலும் ஜூலை என்பதை ‘ஜீலை’ என்று பகுஜன் சமாஜ் கட்சி என்பதை ‘பகுஜன் சமாஜ்வாதி கட்சி’ என்றும் தவறாக எழுதியிருந்தனர். இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.
இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இதை தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது, தந்தி டிவி இதை வெளியிடவில்லை என்று உறுதி செய்தார்.
சமீபத்தில் மாயாவதி அளித்த பேட்டியில் இப்படி ஏதும் தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். ஏப்ரல் 14, 2026 அன்று அவர் பேட்டி அளித்த வீடியோ கிடைத்தது. ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அந்த பேட்டியை இந்தி தெரிந்தவர்களிடம் அனுப்பி தமிழ்நாடு தேர்தல், பொற்கொடி பற்றி ஏதும் தெரிவித்துள்ளாரா என்று கேட்டோம். இந்த வீடியோவை முழுமையாக பார்த்த பின் அவர்களும் “மாயாவதி அப்படி எதுவும் கூறவில்லை” என்றனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியானது.
முடிவு:
“ஆம்ஸ்ட்ராங் இறப்பை வைத்து அவரது மனைவி ஆதாயம் அடைய நினைக்கிறார்” என்று மயாவாதி பேட்டி அளித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


