ஸ்டாலினின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதவி பறிக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் பாலிமர் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் பதவி பறிப்பு. இன்று சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பதவி காலாவதி… இதனால் மு.க.ஸ்டாலின் மன உளைச்சலில் இருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதவிக்காலம் காலாவதியானது என்றும் அவரது பதவி பறிக்கப்பட்டது என்று நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாகி, புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும் வரை மு.க.ஸ்டாலின் பதவி காலாவதி ஆகாது. தேர்தல் நடைபெற உள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளனவே தவிர, மு.க.ஸ்டாலினின் பதவி பறிக்கப்படவில்லை.

மாநில அரசு கலைக்கப்பட்டிருந்தாலோ அல்லது நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்து தண்டனை அளித்திருந்தால் மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதவி பறிக்கப்பட்டது என்று சொல்ல முடியும். ஆனால் வழக்கமான தேர்தல் நடைமுறைக்கு எல்லாம் பதவி பறிக்கப்பட்டது என்று கூறுவது சரியானதாக இருக்காது. அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை மு.க.ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

மேலும் இந்த விவரங்கள் எல்லாம் இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியும். ஏதோ திடீரென்று அறிவிப்பு வெளியாகி, பதவி பறிக்கப்பட்டுவிட்டது என்பதால் மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பது போன்று வதந்தி பரப்பியுள்ளனர். இந்த விவரங்களை எல்லாம் நன்கு அறிந்த எந்த ஒரு ஊடகமும் இப்படி செய்தி வெளியிடாது. எனவே, இது போலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை பாலிமர் டிவி வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். ஆனால், அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் மு.க.ஸ்டாலின் காரில் இருந்த தேசியக் கொடி கழற்றப்பட்டு, தி.மு.க கொடி பொருத்தப்பட்டது என்று நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தனர். அதிலும் ஸ்டாலினின் பதவி பறிக்கப்பட்டது என்று எல்லாம் குறிப்பிடப்படவில்லை.

இந்த நியூஸ் கார்டை பாலிமர் செய்திகள் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மு.க.ஸ்டாலினின் பதவி பறிக்கப்பட்டதால் மன உளைச்சலில் உள்ளார் என்று பரவும் நியூஸ் கார்டு தவறானது, போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: ஸ்டாலினின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply