தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பியால் அழிந்த பனை மரங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் காரணமாக வழியிலிருந்த பனை மரங்கள் அழிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மின் கம்பிகள் உராசியதால் பனை மரங்கள் பட்டுபோய் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது தான் திராவிட மாடல் ஆட்சி… ஏன் அந்த கரண்ட் லைன்ன மாற்றி அமைக்கலாமே.. இவர்கள் தான் அறிவு திருவிழா நடத்துறாங்க…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மின்சாரக் கம்பியை சரியாக அமைக்கத் தெரியாத தி.மு.க அரசு என்றும், இதன் காரணமாக அந்த பகுதியிலிருந்த பனை மரங்கள் அழிந்துவிட்டதாகவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். ஆனால், இது தமிழ்நாட்டில் எந்த பகுதியில் என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டனர். பனை மரம் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்துவிட்டார்கள் போல. வீடியோவில் வரும் சில வாகனங்களைப் பார்க்கும் போது அது தமிழ்நாடு போலத் தெரியவில்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சில நாட்களுக்கு முன்பு இதே வீடியோவை வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், இந்த காட்சி வங்கதேசத்தில் உள்ள நவோகான் பைபாஸ் சாலையில் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். 

அதன் அடிப்படையில் மின்சார கம்பி, நவோகான், பனைமரம் என சில அடிப்படை வார்த்தைகளை ஆங்கிலத்தில் கூகுளில் டைப் செய்து தேடிப் பார்த்தோம். அப்போது இது தொடர்பாக வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில் மின்சார கம்பிகள் அமைப்பதற்காக நவோகன் பைபாஸ் சாலையில் 500க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட்டதாகவும் ஏராளமான பனை மரங்கள் மின்சாரம் தாக்கி கருகியதாகவும் குற்றம்சாட்டி இயற்கை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: dailycountrytodaybd.com I Archive

அந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அந்த இடமும் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இதன் மூலம், வங்கதேசத்தின் வீடியோவை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மின் கம்பம் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டதால் பனை மரங்கள் கருகிய வீடியோவை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பியால் அழிந்த பனை மரங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False