கராத்தே தியாகராஜன் சம்பள பாக்கி வைத்ததால் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டை வீசியது கராத்தே தியாகராஜனின் முன்னாள் கார் டிரைவர் என்றும், கராத்தே தியாகராஜன் சம்பள பாக்கி வைத்ததால் பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினேன் என்று கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாகவும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கராத்தே தியாகராஜனின் முன்னாள் கார் டிரைவர் கருக்கா வினோத். 2 மாதம் சம்பளம் பாக்கி வைத்து தரமறுத்தாதால். பாஜக மீது கோபம் கொண்டு அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசினேன், கருக்கா வினோத் வாக்குமூலம்” என்று இருந்தது.

இந்த பதிவை Nanbenda என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக கருக்கா வினோத் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சில காவல் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இது தவிர கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளதாகவும் பணம் கொடுத்தால் கூலிப்படை நபராக செயல்பட்டு பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில் இந்த கருக்கா வினோத் என்பவர் சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜனின் கார் டிரைவர் என்றும், கராத்தே தியாகராஜன் 2 மாதமாக சம்பளம் தராத கோபத்தில் பாஜக அலுவலகம் மீது குண்டு வீசியதாகவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. மேலும், தர மறுத்ததால் என்பதை “தரமறுத்தாதால்.” என பிழையாக எழுதியிருந்தனர். இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய, முதலில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது புதிய தலைமுறை வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. அதில், “சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் ஒருவர் கைது. சிசிடிவி உதவியுடன் கைது செய்யப்பட்ட நந்தனத்தைச் சேர்ந்த வினோத் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்ய புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் ‘’இந்த நியூஸ் கார்டு போலியானது. நாங்கள் வெளியிட்டது இல்லை,’’ என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாடு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது கராத்தே தியாகராஜனின் டிரைவர் என்று புதிய தலைமுறை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாடு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கராத்தே தியாகராஜனின் டிரைவர் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கராத்தே தியாகராஜன் சம்பள பாக்கி வைத்ததால் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False