
மு.கருணாநிதியின் சிறுவயது புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
யாரோ ஒருவர் பகிர்ந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட நாதஸ்வரம், தவில் வாசிக்கும் குழுவினரின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒரு சிறுவன் மட்டும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளான். படத்தின் மீது, “கருணாநிதி பிறக்கும்போதே கோடீஸ்வரன் என்று தொரை முருகன் சொன்னதை நிரூபிக்கும் அரிய புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Dumeels என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 நவம்பர் 20ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தில் உள்ளவர் கருணாநிதி என்று ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை. கருணாநிதியின் இணையதளம், ஃபேஸ்புக் பக்கங்களில் கருணாநிதியின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் உள்ளன. அவற்றில் இருந்து இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்களா என்று பார்த்தோம். அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி, அழகர்கோவில் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2018 ஜூலை 7ம் தேதி இந்த புகைப்படம் பதிவிடப்பட்டு இருந்தது தெரிந்தது. அதில், “தமிழகத்தின் பாரம்பரிய இசைக் கலைஞர்கள்.. ஊர் திருவிழாக்கள், கோவில்களில் வழிபாடுகளுக்கு, வீட்டு விஷேசங்களுக்கு என மங்கள இசை வழங்கிய, நூறாண்டுகளுக்கு முந்தைய கிராமியக் கலைஞர்கள்.. நம்முடைய இசைக்கலையை பாதுகாத்து வந்த இவர்களுக்கு நம்முடைய சிரம் தாழ்ந்த வந்தனங்கள்…
The Village musicians, of the past century, served village temple festivals, family functions.. Our sincere Salutes to those Artists..” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
Archived Link | Search Link |
தொடர்ந்து கருணாநிதி இளமைக்கால படத்தை தேடி எடுத்து, அதனுடன் இந்த படத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். இருவருக்கும் தொடர்பே இல்லை என்பது அந்த ஒப்பீட்டில் தெரியவந்தது.

இது குறித்து தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “தி.மு.க தலைவர்கள் பற்றி சமூக ஊடகங்களில் பகிரப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. கருணாநிதியின் இளமைக்கால புகைப்படங்கள் அவருடைய அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே உள்ளன. வேண்டுமென்றே அவதூறு பரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தொடர்ந்து பல பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன” என்றார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கருணாநிதியின் இளமைக்கால படம் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கருணாநிதியின் சிறுவயது புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
