
ஜப்பானில் ஏப்ரல் 20, 2026 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்த வந்த சுனாமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் வெள்ள நீர் வருவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். “வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஏப்ரல் 20, 2026 அன்று ஜப்பானில் 7.4 – 7.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில பகுதிகளில் 80 செ.மீ அளவுக்கு அலைகள் உயர்ந்ததாகவும் அதனால் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி பாதிப்பு ஏற்பட்டது போன்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. 2016ம் ஆண்டு தென் கொரியாவில் ஏற்பட்ட சுனாமி என்று இந்த வீடியோவை யூடியூபில் பதிவிட்டிருந்தனர். தென் கொரியாவில் சுனாமி ஏற்பட்டதா என்ற சந்தேகத்துடன் இது உண்மையா என்று அறிய ஆய்வை தொடர்ந்தோம். அதில் குறிப்பிட்டது போது 2016ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி தென் கொரியாவின் பூஷன் நகரில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய தினம் மிகப்பெரிய புயல் தாக்கியதாகவும் அதைத் தொடர்ந்து கடல் அலைகள் உயரமாக எழுந்து பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் கிடைத்தன.
எனவே, இது தென் கொரியா சுனாமியாக இருக்காது என்று ஆய்வைத் தொடடர்ந்தோம். அப்போது, நமக்கு கிடைத்த எக்ஸ் தள பதிவு ஒன்றில் இது 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பு என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே நம்முடைய ஆய்வை தொர்ந்தோம். அப்போது, 2015ம் ஆண்டு பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோவில் இது 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் பாதிப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜப்பானின் கெசெனுமா (Kesennuma) என்ற இடத்தில் மார்ச் 11, 2011 அன்று ஏற்பட்ட சுனாமி என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் பழைய வீடியோவை எடுத்து தற்போது நடந்தது என்று தவறாக பதிவிட்டிருப்பது தெளிவானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடியது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இது 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் வீடியோ பதிவை தற்போது ஏற்பட்டது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


