மோடி ஆட்சியில் ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104ல் இருந்து 43வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா– வதந்தியா; உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் ஒரே ஆண்டில், 104வது இடத்தில் இருந்து 43வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளதாகவும் மோடி அரசின் செயல்பாடுதான் காரணம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

கார் ஒன்றிலிருந்து இறங்கும் பிரதமர் மோடியை மலர்களை தூவி வரவேற்கும் படத்தை வெளியிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104வது இடத்திலிருந்து 43வது இடத்துக்கு இந்தியா முன்னேறியது. மோடி சர்க்கார் 2” என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

இந்த பதிவை, Vishwanathan Kandasamy என்பவர் 2019 ஜூன் 4ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் மற்றும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International)என்ற அமைப்பு 1995ம் ஆண்டில் இருந்து வெளியிட்டு வருகிறது. ஊழல் அற்ற நாடு, ஊழல் மலிந்த நாடு என்று இது சில குறிப்பிட்ட அளவுகோலை இந்த அமைப்பு வைத்துள்ளது. இந்த மதிப்பீட்டு முறை பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு வெளியிடும் பட்டியல் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில், அதற்கு முந்தைய ஆண்டுக்கான ஊழல் மலிவு நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018ம் ஆண்டுக்கான ஊழல் மலிந்த நாடுகள் பட்டியல் 2019 ஜனவரி 29ம் தேதி வெளியானது.

இந்த அமைப்பு ஒவ்வொரு நாடுகளுக்கும் உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் நிதி சார்ந்த அமைப்புகள் வெளியிடும் தகவல், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் புள்ளிகளை வழங்குகிறது. 100 புள்ளிகள் என்றால் ஊழலே இல்லாத நாடு. 0 புள்ளி என்றால் ஊழல் மலிந்த நாடு என்று அர்த்தம். 2018ம் ஆண்டுக்கு இந்த அமைப்பு 41 புள்ளிகளை வழங்கியுள்ளது.

Least corrupt countries 2.png

இந்த புள்ளி அடிப்படையில் அதில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு 78வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவுக்கு 81வது இடம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு மூன்று இடங்கள் முன்னேறி 78வது இடத்தை இந்தியா பிடித்துள்ளதாக டிரான்ஸ்பரன்ஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

Least corrupt countries 3.png

இது தொடர்பாக இந்து தமிழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். தினமலரில் வெளியான செய்திக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

உலகின் பணக்காரர்கள், பெரிய நிறுவனங்கள் என்று தொடர்ந்து பட்டியல் வெளியிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூட இந்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே உலகின் ஊழல் நிறைந்த நாடுகள் செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மை இப்படி இருக்க, ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா ஒரே ஆண்டில் 104ல் இருந்து 43வது இடத்துக்கு வந்துவிட்டதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான எந்த ஒரு ஆதாரத்தையோ, மேற்கோளையோ அளிக்கவில்லை. இது உண்மையா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிடும் ஊழல் மலிந்த, ஊழல் இல்லாத நாடுகள் பட்டியல் மட்டுமே நம்பகத் தன்மையானதாக பார்க்கப்படுகிறது. அதன் பட்டியலில் இந்தியாவுக்கு 41 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 78வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பதிவை வெளியிட்ட Vishwanathan Kandasamy பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னுடைய அரசியல் பார்வை பற்றி அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

Least corrupt countries 4.png

ஆனால், அவருடைய பதிவுகள் அனைத்தும் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்தன. ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி சங்கர் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் பெயர் ஜெயசங்கர் என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து பெயரை மாற்றினார்.

Least corrupt countries 5.png

இவருடைய பின்னணியைப் பார்க்கையில், பா.ஜ.க மற்றும் மோடியை புகழும் வகையில் பதிவிட்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தோம். நல்லது செய்கிறேன் என்று பா.ஜ.க-வுக்கு எதிராக பதிவிட்டது போல மேற்கண்ட பதிவு இருந்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வில் நமக்கு கிடைத்த தகவல்:

டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்ட ஊழல் மலிந்த, குறைந்த நாடுகள் பட்டியல் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அதற்கு முந்தைய ஆண்டுக்கான பட்டியலை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் வெளியிடும் வழக்கத்தை வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இந்து தமிழ், தினமலர், ஃபோர்ப்ஸ் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன.

ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104வது இடத்தில் இருந்து 43வது இடத்துக்கு முன்னேறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உலக ஊழலற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 43வது இடத்துக்கு முன்னேறியது என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடி ஆட்சியில் ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 104ல் இருந்து 43வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா– வதந்தியா; உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •