
92 சதவிகித அரசு ஊழியர்கள் அதிமுக-வுக்கு வாக்களித்ததாக சன் நியூஸ் மற்றும் பாலிமர் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “92% அரசு ஊழியர்கள் அதிமுகவிற்கு வாக்கு! அரசு ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என தமிழகத்தைச் சேர்ந்த அரசு பணியாளர்கள் 92% அதிமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தபால் வாக்கு செலுத்தியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழக அரசியலில் இது ஒரு மெகா திருப்பமாக பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதே தகவலை ஒரு வார்த்தை கூட மாற்றாமல் பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போலவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த இரண்டு நியூஸ் கார்டுகள் தொடர்பாகவும் ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், முதியவர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி உள்ளது. இது வாக்கு எண்ணிக்கை அன்று தான் எண்ணப்படும். ஆனால், அரசு ஊழியர்களில் 92 சதவிகிதம் பேர் அதிமுக-வுக்கு தபால் வாக்கு அளித்துள்ளதாக தகவல் பரவியுள்ளது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். யார் இந்த தகவலை சொன்னது என்று இல்லை.
திமுக-வுக்கு எதிரான, அதிமுக-வுக்கு சாதகமான வதந்தி போன்ற பதிவுகளை சன் நியூஸ் வெளியிட வாய்ப்பும் இல்லை. தபால் வாக்குகளை எண்ணும் வரையில் இந்த விவரங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்பதாலும், இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக சன் நியூஸ், பாலிமர் நியூஸ் வௌியிடும் நியூஸ் கார்டுகளில் உள்ளது போல இல்லை என்பதாலும் இதை ஆய்வு செய்தோம்.
இப்படி ஒரு நியூஸ் கார்டை சன் நியூஸ் மற்றும் பாலிமர் செய்திகள் ஊடகம் வௌியிட்டதா என்று அறிய அவற்றின் ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை சன் நியூஸ் டிஜிட்டல் மற்றும் பாலிமர் டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினோம். அவர்களும் இவை போலியான நியூஸ் கார்டு என்பதை உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
92 சதவிகித அரசு ஊழியர்கள் அதிமுக-வுக்கு வாக்களித்ததாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


