
பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது போல S.S.L.C தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸடாலின் கூறியதாக புதிய தலைமுறை, தந்தி டி.வி நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது போல S.S.L.C தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசியதால் சர்ச்சை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவை KattumaramFails என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூன் 9ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்சம் தள்ளியாவது வைக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வந்தார். உதயநிதி ஸ்டாலின் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சென்று இது தொடர்பாக கோரிக்கைவிடுத்தார். சென்னை உயர் நீதிமன்றமும் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியது. கடைசியில் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.
தமிழக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகள் பற்றிய தெளிவு இருக்கும். ஆனால் இது போன்ற பதிவுகள் தற்போது நகைச்சுவைக்காக, அசிங்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் இந்த நியூஸ் கார்டை பார்ப்பவர்கள் உண்மை என்றே கருத வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பாக ஆய்வு நடத்தினோம்.

முதலில் புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்பதை ஆய்வு செய்தோம். இது வழக்கமான புதிய தலைமுறை நியூஸ் கார்டு போல இல்லை. ஃபாண்ட், டிசைன் என அனைத்திலும் வித்தியாசமாக இருந்தது. புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 9, 2020ல் வெளியான நியூஸ் கார்டுகளை எல்லாம் ஆய்வு செய்தோம். அதில் எதுவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு இல்லை.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து அறிவிப்பை வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் கூறிய நியூஸ் கார்டுதான் கிடைத்தது. இது தொடர்பாக புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். இது போலியானது என்று அவர்களும் உறுதி செய்தனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்துக்கு பிறகு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைகளை ஆய்வு செய்தோம். எதிலும் அவர் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தது போல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியதாக இல்லை.
10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தது போல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி அதுதொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
நம்முடைய ஆய்வில்,
இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் அறிக்கைகள் நமக்குக் கிடைத்துள்ளன.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டது போன்று எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தது போல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:எஸ்.எஸ்.எல்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
