
நக்கீரன் இதழ் நஷ்டத்தின் காரணமாக மூடப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நக்கீரன் கோபால் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “பொய் செய்திகளை வெளியிட்டு வந்த இந்துக்கள் புறக்கணித்த நக்கீரன் வார இதழ் நஷ்டத்தால் மூடப்படுகிறது..மிக்க மகிழ்ச்சி..” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Govind Palaniguru என்பவர் 2019 நவம்பர் 9ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தின் முன்னணி புலனாய்வு இதழ்களில் நக்கீரனும் ஒன்று. சந்தன கடத்தல் வீரப்பனுடன் நேரடியாக பேட்டி கண்டு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இதழ் இது. தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதனால் இந்த இதழின் மீது குறிப்பிட்ட பிரிவினருக்கு எப்போதும் வெறுப்பு இருந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், நக்கீரன் இதழ் நஷ்டத்தின் காரணமாக மூடப்படுகிறது என்று செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். இது தொடர்பாக நக்கீரன் ஏதேனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதா என்று அதன் இணையதளத்துக்கு சென்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. செய்தி ஏதும் நக்கீரன் தரப்போ அல்லது மற்ற ஊடகங்களோ வெளியிட்டுள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Search Link |
இதைத் தொடர்ந்து நக்கீரன் இதழின் சட்ட ஆலோசகர் சிவக்குமாரைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “சமூக ஊடகங்களில் இந்த வதந்தி நான்கு ஐந்து நாட்களாக பரவி வருவதாக கேள்விப்பட்டோம். சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவது வாடிக்கைதானே என்று விட்டுவிட்டோம். அது வெறும் வதந்திதான்” என்றார்.
நக்கீரன் இதழின் சட்ட ஆலோசகர் விளக்கம் அடிப்படையில், நக்கீரன் இதழ் நஷ்டத்தின் காரணமாக மூடப்படுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நக்கீரன் மூடப்படுகிறதா? – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
