
தவெக-வின் வெற்றியை மது அருந்தி சாலையில் கும்மாளமிட்டு கொண்டாடிய பெண்கள், கல்லூரி மாணவிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் சில இளம் பெண்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மீது “பெண்கள், கல்லூரி மாணவிகள் குடித்துவிட்டு கும்மாளம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “தாவெக வெற்றியை நாகரிகமாக கொண்டாட்டிய கல்லூரி மாணவியர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் மே 10, 2026 அன்று பொறுப்பேற்றார். அவரது வெற்றியைக் கொண்டாடும் வகையில் இளம் பெண்கள் மது அருந்திவிட்டு சாலையில் கும்மாளமிட்டனர் என்று எதிர்க்கட்சியான தி.மு.க-வைச் சார்ந்த பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவை பார்க்கும் போது அதில் உள்ள காவலர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் போல இல்லை. புதுச்சேரி காவலர்கள் அணியும் தொப்பி அணிந்திருந்தனர். எனவே, இந்த பதிவில் இடம் பெற்றுள்ள தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற வீடியோவின் உண்மையான பதிவு நமக்கு கிடைத்தது. அந்த பதிவானது 2026 ஏப்ரல் 16ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் 2026 ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. தேர்தலுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
அந்த வீடியோவில் வேறு மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வந்த இளைஞர்கள் சிலர் சாலையில் தகராறு செய்ததாகவும் அதை பொது மக்கள் தட்டிக்கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இளம் பெண்கள், இளைஞர்களை போலீசார் கைது செய்யாவிட்டால் துணை நிலை ஆளுநரை அழைப்பேன் என்று வீடியோவை எடுத்த நபர் கூறியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.
மேலும் இவர்கள் தவெக-வைச் சார்ந்தவர்கள் என்று அந்த வீடியோவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவை எல்லாம் விஜய் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனதை மது அருந்திவிட்டு சாலையில் கும்மாளவிட்டு கொண்டாடிய இளம் பெண்கள் என்று தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு புதுச்சேரியில் சில இளம் பெண்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வீடியோவை தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை மது அருந்தி கொண்டாடிய பெண்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


