
தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாமல் பொது மக்கள் அவதியுற்றதாக, முதல்வர் விஜய்க்கு எதிராக பெண் ஒருவர் ஆத்திரத்தில் பேசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
குமுதம் இதழ் ஊடகம் வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சிறப்பு பேருந்து எங்க..? ஆத்திரத்தில் பேசிய பெண்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் திருவண்ணாமலைக்கு வந்த பெண் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கோபமாக பேசிய காட்சிகள் இருந்தன. நிலைத் தகவலில், “சிறப்பு பேருந்து எங்க !!! Actor Vijay” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாமல் மக்கள் அவதியுறுவதாக வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆட்சியின் ஆரம்பத்திலேயே இப்படி ஒரு நிலை என்று சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த வீடியோ விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அல்லது அவரது கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பிறகு எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.

இதை குமுதம் ஊடகம் வெளியிட்டிருந்ததால் அதன் சமூக ஊடக பக்கங்களுக்குச் சென்று பார்த்தோம். விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற மே 10ம் தேதிக்குப் பிறகு இந்த வீடியோவை குமுதம் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. எனவே, சற்று பின்னோக்கித் தேடிப் பார்த்தோம். அப்போது மே 2ம் தேதி இந்த வீடியோவை குமுதம் வெளியிட்டிருந்ததைக் கண்டறிந்தோம். தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இந்த வீடியோ வெளியாகி இருப்பதன் மூலம் இதற்கும் தவெக அரசுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவானது.
தி.மு.க காபந்து அரசாகத் தொடர்ந்த காலத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோவை தவெக ஆட்சி அமைந்த சூழலில் மக்கள் பாதிப்பு என்பது போலத் தவறாகப் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான வீடியோவை தவெக ஆட்சியில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் கொந்தளிப்பு தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


