
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்ற பெயரில் குடும்பம் என்ற அடிப்படை இந்தியக் கலாச்சாரத்தை பாஜக அழிக்கத் துடிக்கிறது. பெண்கள் நாடாள வந்தால் வீட்டை கவனிப்பது யார் என்று ராகுல் காந்தி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ராகுல் சர்ச்சை பேச்சு. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற பெயரில் குடும்பம் என்ற அடிப்படை இந்திய கலாச்சாரத்தை பாஜக அழிக்க துடிக்கிறது. பெண்கள் நாடு ஆள வந்தால் வீட்டில் வயதானவர்களையும், குழந்தைகளையும், பெற்றோர்களையும் கவனிப்பது யார் என்று பிரச்சாரத்தின் போது கேள்வி எழுப்பினார்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கக் கூடாது என்று ராகுல் காந்தி கூறியது போன்றும், பெண்கள் வீட்டு வேலையை செய்ய வேண்டும் என்று கூறியது போலவும் நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் ராகுல் காந்தி அப்படி பேசியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அதே நேரத்தில் அவர் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ நமக்கு யூடியூபில் கிடைக்கிறது. அதில் எங்கும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று ராகுல் காந்தி கூறவில்லை.
அவர் பேசும் போது, “உண்மையில் இது மகளிர் மசோதாவே இல்லை. இதற்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பெண்களுக்கான மசோதா என்று ஒன்று உள்ளது. அது 2023ம் ஆண்டு இதே அவையில் தான் நிறைவேற்றப்பட்டது. என்னுடைய பாஜக நண்பர்களும், ஆசிரியர்களும் இந்த மகளிர் மசோதா 10 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்கள். அதுதான் பெண்களுக்கான மசோதா. பெண்களே நம் நாட்டின் மையப் புள்ளி. இந்த அவையில் உள்ள ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வில் தாயாக, சகோதரியாக, மனைவியாக உள்ள பெண்களிடமிருந்து ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டிருப்பார்கள்” என்று பேசியிருந்தார்.
உண்மை இப்படி இருக்க, பெண்கள் அரசியலுக்கு வந்தால் வீட்டில் உள்ளவர்களை யார் கவனித்துக்கொள்வது என்று ராகுல் காந்தி பிரசாரத்தில் பேசியதாக வதந்தியைப் பரப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்த அவர் எந்த இடத்திலும் அப்படி பேசியதாக செய்தி இல்லை. எனவே, இந்த தகவல் தவறானது என்பது உறுதியானது.
அடுத்ததாக இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டுகளில் உள்ளது போல் இல்லை. எனவே, இதுவும் போலியானது என்று தெரிகிறது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துகொள்ள ஆய்வைத் தொடர்ந்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் ஏப்ரல் 18, 2026 என்று தேதியைக் குறிப்பிட்டிருந்தனர். அந்த குறிப்பிட்ட தேதியில் தந்தி டிவியில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம். ராகுல் காந்தி தொடர்பாக பல நியூஸ் கார்டுகளை வெளியிட்டிருந்தனர். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, இது போலியானது என்று தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிடவில்லை. இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பெண்கள் நாடாள வந்தால் வீட்டை யார் கவனிப்பது என்று தேர்தர் பிரசாரத்தில் ராகுல் காந்தி கேள்வி என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


