ஆறு மாதம் கழித்து இயக்கியதால் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர்?- விஷமத்தனமான பதிவு

சமூக ஊடகம் தமிழகம்

ஆறு மாதம் கழித்து ஓட்டியதால், பிரேக்குக்கும், ஆக்சிலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் அரசு பஸ் ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆறு மாசமா ரெஸ்ட் எடுத்தவனை, திடீர்னு இன்னிக்கு பஸ்சை ஓட்றா னு சொன்னுதும் சொன்னாங்க… பிரேக்கு எங்க இருக்கு, ஆக்சிலேட்டர் எங்க இருக்கு னே, மறந்து போயிட்டாரு ட்ரைவர்! 

(அதுக்காக , கரப்பான் பூச்சிய கவுத்துப் போட்ட மாதிரியாடா கவுத்துப் போடுவ? 🤔 😀) இடம்: அரவங்காடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை காதர் மைதின் கறம்பக்குடி என்பவர் 2020 செப்டம்பர் 1ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஜூன் 1ம் தேதி பஸ்கள் இயக்கப்பட்டன. மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கவே பஸ்கள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2020 செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாவட்டத்திற்குள் மட்டும் இயக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

oneindia.comArchived Link

இந்த பதிவில் குறிப்பிட்டது போல அரவங்காடு எங்கே உள்ளது என்று பார்த்தபோது அது நீலகிரி மாவட்டத்தில் இருப்பது தெரிந்தது. நீலகிரியில் பஸ் விபத்து ஏதும் நடந்துள்ளதா என்று தேடிய போது அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இந்த புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தேடிப் பார்த்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது 2018ம் ஆண்டு ஒரு இணையதளத்தில் இந்த படம் வெளியாகி இருப்பது தெரிந்தது. ஆனால், அந்த தளம் தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதால் கண்டறிய முடியவில்லை. அதில், நெல்லை அருகே விபத்து என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே, அதை அடிப்படையாக வைத்து கூகுளில் தேடினோம்.

dailythanthi.comArchived Link

அப்போது தினத் தந்தி 2018 அக்டோபர் 22ம் தேதி இந்த படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “நெல்லையில் இருந்து 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தென்காசி நோக்கிச் சென்ற பஸ், நல்லூர் விலக்கு என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதன் அடிப்படையில் கூகுளில் தேடிய போது புதிய தலைமுறை வெளியிட்ட வீடியோவுடன் கூடிய செய்தி கிடைத்தது. இதன் மூலம் 2018ம் ஆண்டு வெளியான செய்தியின் படத்தை எடுத்து தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஆறு மாதம் கழித்து இயக்கியதால் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர்?- விஷமத்தனமான பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False