
திருப்பூர் அருகே பல்லடத்தில் குப்பை கொட்டக் கூடாது என்று போராடிய மக்களைத் தாக்கிய தவெக அரசின் போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை போலீசார் கைது செய்யும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#திருப்பூர் அருகே #பல்லடத்தில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட #பொதுமக்களை #ரீல்ஸ்அரசு காவல்துறை மூலம் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர் 😭😭

உண்மைப் பதிவைக் காண: Facebook
#TVKITWING #சோபாமுதலமைச்சர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருப்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்ததாக ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பொது மக்களை ரீல்ஸ் அரசு, தவெக அரசு காவல் துறையைப் பயன்படுத்தி குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால், வீடியோவில் குறிப்பிட்டிருந்த ஊடகத்தின் பதிவு நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், வேறு ஊடகங்களில் வெளியான இதே காட்சிகள் கொண்ட செய்திகள் நமக்கு கிடைத்தன. மேலும், பாஜக-வின் செயலாளராக இருந்து, சமீபத்தில் அண்ணாமலையின் அமைப்பில் இணைந்த அமர்பிரசாத் ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ 2025 டிசம்பர் 17ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கூகுளில் பல்லடம், திருப்பூர், குப்பை என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது 2025 டிசம்பர் 16ம் தேதி தினமலர் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில் திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பயன்பாடற்ற பாறைக் குழிகளில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகளை எடுத்து வந்த லாரிகளை மக்கள் சிறை பிடித்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2025 டிசம்பர் 16ம் தேதி சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பதை உறுதி செய்துள்ளோம். அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் இருந்தது. இதன் மூலம் இந்த கைது சம்பவத்திற்கும் தவெக அரசுக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிகவும் மோசமாக கையாண்ட தவெக அரசின் காவல் துறை என்று பரவும் வீடியோ கடந்த தி.மு.க ஆட்சியின் போது வௌியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


