விஜய் ஆட்சியில் மின் கம்பியில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

விஜய் ஆட்சியின் உயர் அழுத்த மின் கம்பியில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நீர்நிலைக்குள் அமைக்கப்பட்ட உயர் அழுத்த மின்கம்பியில் இளைஞர்கள் பலரும் தொங்கி விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டேய் ஷாக் அடிக்க போவுதுடா..⚡ போடா வெண்ணை…. யார் ஆட்சி நடக்குது தெரியுமா? நாம் விஜய்ண்ணா ஆட்சி…… கரண்ட் எல்லா வராது தைரியமா விளையாடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு காரணமாக மின் கம்பிகளில் தொங்கி இளைஞர்கள் விளையாடுகின்றனர் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தமிழ்நாட்டில் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல மாதங்களாகவே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. பலரும் பீகாரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். சில செய்தி ஊடகங்களிலும் கூட பீகாரில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக மிகப்பெரிய அளவில் மின்வெட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில் மின் கம்பிகளில் தொங்கி இளைஞர்கள் விளையாடினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் 2025 செப்டம்பர் 22ம் தேதியில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

இந்த வீடியோ பீகாரைச் சார்ந்தது என்று பலரும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், எங்கு எடுக்கப்பட்டது என்று யாரும் பதிவிடவில்லை. எனவே, இந்த வீடியோ பீகாரைச் சார்ந்ததுதான் என்பதை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், 2025 செப்டம்பரில் இந்த வீடியோ வெளியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

2026 மே மாதம் தான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது. 2025ல் எல்லாம் தி.மு.க தான் ஆட்சியிலிருந்தது. எனவே, இந்த வீடியோ தவெக ஆட்சியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் விஜய் ஆட்சியில் மின் கம்பியில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பீகாரில் மின்சார ஒயரில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று வெளியான வீடியோவை எடுத்து, விஜய் ஆட்சியில் மின்சாரம் வராது என்பதால் மின் கம்பியில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: விஜய் ஆட்சியில் மின் கம்பியில் தொங்கி விளையாடும் இளைஞர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply