
அறியாத வயதில் தான் செய்த தவற்றை வைரல் ஆக்கிய தி.மு.க-வுடன் இனி எந்த ஒரு காலத்திலும் கூட்டணி கிடையாது என்று பாரிவேந்தர் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்துவின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது! அறியாத வயதில் நான் செய்த தவறு அதை திமுக தான் பெரிதாக்கியது. என் அந்தரங்க படத்தை வெளியிட்டு அதை வைரல் ஆக்கிய திமுகவுடன் இனி ஒரு காலத்திலும் கூட்டணி கிடையாது – பாரிவேந்தர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எஸ்.ஆர்.எம் கல்வி குழுமங்களைத் தொடங்கியவரும் ஐஜேகே என்ற கட்சியின் தலைவராக இருப்பவருமான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்துவுடையது என்று தனிப்பட்ட அந்தரங்க வீடியோ ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வெளியானது. இதை அடிப்படையாக வைத்து இப்போது நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக – அதிமுக கூட்டணியில் பச்சமுத்துவின் கட்சி உள்ளது. இந்த நிலையில் தி.மு.க-வுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என்று அவர் கூறியதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு அவர் சொன்ன காரணம் என்பது தனிப்பட்ட முறையில் பச்சமுத்துவின் மரியாதையைக் குறைக்கும் வகையில் விஷமத்தனமாக சேர்த்துப் பதிவிட்டது போல் உள்ளது. மேலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு புதிய தலைமுறை வழக்கமாக வெளியிடும் நியூஸ் கார்டு போல் இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
பாரிவேந்தர் பச்சமுத்து இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. புதிய தலைமுறை சமூக ஊடக பக்கங்களிலும் இது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் காணப்படவில்லை. எனவே, இது போலியானது என்பது தெளிவானது.
முடிவு:
திமுக-வுடன் இனி கூட்டணி கிடையாது என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


