FactCheck: ஒரு வீட்டில் ஒருவருக்கு மட்டுமே அரசுப் பணி?- ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை என பகிரப்படும் வதந்தி…

அரசியல் சமூகம் தமிழ்நாடு

‘’ஒரு வீட்டில் கணவன் அல்லது மனைவி என யாரேனும் ஒருவர் மட்டுமே இனி அரசுப் பணியில் நீடிக்க முடியும்- திமுக அதிரடி நடவடிக்கை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே ( ) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இதில், ‘’முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டம் அறிவித்துள்ளார். இதன்படி, ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி யாரேனும் ஒருவருக்கு கட்டாய அரசுப் பணி தரப்படும். ஏற்கனவே அரசுப் பணியில் கணவன் அல்லது மனைவி இருந்தால், அவர்களில் ஒருவரது பணி பறிக்கப்படும். அல்லது அவர்களே முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள், விரும்பினால், ஒப்பந்த அடிப்படையில் ரூ.10,000 மட்டுமே தரப்படும். ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்களை திருமணம் செய்ய விரும்பினால் தங்களது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டே, அவ்வாறு செய்ய வேண்டும். ஒரு கோடிக்கு அதிகமான சொத்து உள்ள குடும்பத்தினருக்கு அரசுப் பணி தரப்படாது. கணவன் அல்லது மனைவி மத்திய அரசுப் பணியில் இருந்தால், வீட்டில் மற்றவருக்கு மாநில அரசுப் பணி தரப்படாது. 30 ஆண்டுகள் மட்டுமே அரசுப் பணி, அதற்கு மேல் பணிபுரிந்தால், அது சட்டப்படி குற்றம்,’’ என எழுதியுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நாள் முதலாக, சமூக வலைதளங்களில் பலரும் புதுப்புது தகவல்களை திமுக அறிவித்ததாகக் கூறி பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பகிரப்படும் ஆதாரமற்ற தகவல்தான் மேலே நாம் கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்ட விவரமும்.

வீட்டில் ஒருவர் மட்டுமே அரசுப் பணி செய்ய வேண்டும் என்பதை டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் கட்டாயமாக்கியுள்ளார் என்று ஏற்கனவே, ஒரு வதந்தி பகிரப்பட்டது.

அந்த வதந்தியில் கெஜ்ரிவால் பெயரை மாற்றிவிட்டு, மு.க.ஸ்டாலின் பெயரை சேர்த்து தற்போது பகிர தொடங்கியுள்ளனர். உண்மையில், இவர்கள் கூறுவது போல, ‘’வீட்டில் ஒருவருக்கு மட்டுமே அரசுப் பணி, ஒரு கோடிக்கு மேல் சொத்து இருந்தால் அரசுப் பணி கிடையாது, அரசுப் பணியில் இருப்பவர் விரும்பினால் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும், அரசுப் பணியில் இருந்து தனியாருக்கு மாறலாம்,’’ என்று கூறுவதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விசயம்.

இப்படியான அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் இதுவரை வெளியிடவில்லை. தேர்தல் அறிக்கை 2021ல் வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டது.

Tamil News 18 Link

இதேபோல, திமுக.,வின் தேர்தல் அறிக்கை 2021 லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

DMK manifesto 2021 link

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி தருவோம் என்று கட்சிகள் கூறுவதே வழக்கம். மாறாக, வீட்டில் ஒருவர் மட்டுமே அரசுப் பணி செய்ய வேண்டும், ஒருவருக்கு மேல் அரசுப் பணியில் இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும், என்றெல்லாம் யாரும் கூறமாட்டார்கள். அப்படி கூறினால் ஓட்டு கிடைக்காது என்பது அரசியல் கட்சியினருக்கு தெரியும். வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க, கடந்த 2020 முதலே திமுக தரப்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்த பிறகு, அதுதொடர்பான அறிவிப்பு கூட இதுவரை வெளியாகவில்லை.

Dinamalar Link

இதுதவிர, தற்போதைய சூழலில் திமுக அரசு இத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிட்டதா என உறுதிப்படுத்திக் கொள்ள, அறிவாலய வட்டாரம், திமுக செய்தித் தொடர்பு பிரிவு உள்ளிட்டோரிடம் விவரம் கேட்டோம். இந்த தகவல் ஏற்புடையதல்ல என்று அவர்களில் சிலர் கூறினாலும், இதுபற்றி கூடுதல் விவரம் கூற மறுத்துவிட்டனர். யாரேனும் திமுக தரப்பில் விளக்கம் அளித்தால், அதனையும் இங்கே வெளியிட தயாராகவே உள்ளோம். 

எனவே, தமிழ்நாட்டில் வீட்டில் ஒருவர் மட்டுமே அரசுப் பணி செய்ய வேண்டும் என பகிரப்படும் மேற்கண்ட தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஒரு வீட்டில் ஒருவருக்கு மட்டுமே அரசுப் பணி?- ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை என பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False