வட இந்தியாவில் தனது மகளை திருமணம் செய்த முதியவர் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’பிரம்மா தன் மகள் சரஸ்வதியை திருமணம் செய்தது போல, நானும் என் மகளைத் திருமணம் செய்துகொண்டேன்,’’ என்று வட இந்திய பண்டிட் ஒருவர் கூறியதாக வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

முதியவர் ஒருவர் இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்வது போன்று திருமணம் செய்வது போன்று புகைப்படம் மற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் இந்தியில் பேசுகிறார், அதனால் என்ன பேசுகிறார் என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “1948ல்., தன்னிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த 30 வயது பெண்மணியை., அன்றைய இந்து வாரிசு சட்டத்தின் கட்டாயத்தால், திருமணம் செய்த பெரியாரை…

70 வயதில் 20 வயது வளர்ப்பு மகளை திருமணம் செய்தவர் என்று சொல்ல ஆரம்பித்து.,70 வயதில் 20 வயதான தனது மகளையே திருமணம் செய்தவர் பெரியார் என்று பெரியாரை இழிவு படுத்துகின்றனர்.!

ஆனால் 2023ல் ஒரு பண்டிட் பார்ப்பணர் ஒருவர்.,எங்கள் பிரம்மா அவரது மகள் சரஸ்வதியை மணந்தது போல்.,நானும் தனது மகளை திருமணம் செய்துள்ளேன் என்கிறார்.!

பாவம், பிரம்மா கடவுளை பார்த்து இவர் கெட்டு போயிட்டார்.!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Kandasamy Mariyappan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 3ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோ பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

முதியவர் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ உணவகத்தில் மாலையை மாற்றிக் கொண்டது போல உள்ளது. கோவில், மண்டபம் அல்லது பதிவுத் துறை அலுவலகத்தில்  உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணம் நடந்தது போல இல்லை. மாலையை மாற்றிக்கொண்டு யாரோ ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது போல உள்ளது. இது எந்த வகையில் திருமணம் என்று குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த வீடியோ உண்மையானதுதானா, இப்படி ஒரு சம்பவம் வட இந்தியாவில் நடந்ததா என்று அறிய இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, யூடியூபில் சிலர் இதைப் பதிவிட்டிருப்பது தெரிந்தது. ஆனால், வட இந்தியாவில் முதியவர் தன் மகளையே திருமணம் செய்தார் என்று எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அந்த யூடியூப் வீடியோவை பார்வையிட்டோம்.

வீடியோ ஓடத் தொடங்கிய 38வது விநாடியிலேயே வீடியோ பற்றி எச்சரிக்கை குறிப்பு வெளியாகி இருந்தது. அதில் இது பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: YouTube

Karan Kotnala என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி இருந்தது. அதில் 17 வயது கோல்டன் பெண் 62 வயது முதியவரைத் திருமணம் செய்தார் என்று இருந்தது. 17 வயது பெண்ணை திருமணம் செய்திருந்தால் போக்சோ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அப்படி எந்த ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. அந்த வீடியோவின் குறிப்பு பகுதியில் “முக்கிய அறிவிப்பு, இந்த வீடியோ பொழுதுபோக்குக்காக மட்டுமே. வீடியோவில் இடம் பெற்ற அனைத்து நபர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இது ஸ்கிரிப்டட் வீடியோ என்பது தெரிந்தது.

இதை உறுதி செய்துகொள்ள இந்த யூடியூப் சேனலில் வெளியான காணொளிகளைப் பார்த்தோம். அதில் மணப்பெண்ணாகக் காட்சி அளித்த பெண் பங்கேற்ற பல வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. நையாண்டி நோக்கிற்காக பல வீடியோக்கள் உருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெரிந்தது. 

இதன் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வீடியோவை வைத்து, இந்துக்களின் முக்கிய கடவுள்களில் ஒருவரான பிரம்மா தன் மகளைத் திருமணம் செய்துகொண்டது போன்று நானும் என் மகளைத் திருமணம் செய்துகொண்டேன் என்று முதியவர் கூறியதாக தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வட இந்தியாவில் முதியவர் ஒருவர் இந்து கடவுளான பிரம்மாவை காரணம் காட்டி தனது மகளை திருமணம் செய்தார் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வட இந்தியாவில் தனது மகளை திருமணம் செய்த முதியவர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False