வங்கதேசத்தில் இந்துக்களின் கடைகளில் முஸ்லிம்கள் கொள்ளை அடித்து செல்கின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கடை ஒன்றில் இருந்து ஏராளமான ஆண்கள் பொருட்களை தூக்கிச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பங்களாதேஷில் உள்ள, சிட்டகாங் மார்க்கெட் பகுதியில் உள்ள, இந்துக்களுக்கு சொந்தமான கடையை கொள்ளையடித்த திருட்டு முஸ்லிம் கூட்டம்.. *இது 1989 காஷ்மீரின் மறுநிகழ்வு..* 😥 இந்திய நடுநிலை இந்துக்களே வெகு தூரம் இல்லை விரைவில் உங்களுக்கும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் உள்நாட்டுப் போராட்டம் உச்சத்திலிருந்த போது இந்துக்களின் கடைகள் கொள்ளையடிக்கப்படுகிறது, இந்துக்கள் கொலை செய்யப்படுகின்றனர், இந்து பெண்கள் மானபங்கம் செய்யப்படுகின்றனர் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் தவறான வீடியோக்கள் பகிரப்பட்டன. வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங்கில் இந்துக்களின் கடையில் கொள்ளையடிக்கப்படுவதாக வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். விரைவில் இந்த சம்பவம் இங்கும் நடக்கலாம். நம் ஊரிலும் கூட இஸ்லாமியர்கள் இப்படி செய்வார்கள் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த பதிவில் உள்ளது போன்று இந்த கடை இந்துவின் கடையா, இந்த வீடியோ உண்மையில் எங்கு எடுக்கப்பட்டது என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சரியான முடிவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. வங்க மொழியில் வெளியான ஒரு சில பதிவு தவிர்த்து அனைத்தும் இந்தியாவிலிருந்து வெளியான இந்தி, ஆங்கிலப் பதிவுகளாக இருந்தன. அவற்றில் எல்லாம் வங்கதேசத்தில் இந்துக் கடையை கொள்ளையடிக்கும் இஸ்லாமியர்கள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

வங்க மொழியில் வெளியான பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், "முகமதுபூரில் யெல்லோ கடையில் தேவையற்ற வேலையை மக்கள் செய்துள்ளனர். கடையை முழுவதும் கொள்ளையடித்துள்ளனர். இந்த கேடுகெட்ட செயலை செய்பவர்கள் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்பது போன்று பதிவிடப்பட்டிருந்தது. மற்றொரு பதிவில், "பங்குச் சந்தையில் வீழ்ச்சியடைந்த குஷில்ப் சல்மான் எஃப் ரஹ்மானின் யெல்லோ அவுட்லெட்டில் கொள்ளையடிக்கும் சலுகை" என்ற அர்த்தத்தில் பதிவிடப்பட்டிருந்தது. வங்கதேசத்தில் யெல்லோ ஸ்டோரில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெளிவானது.

வங்க மொழியில் வெளியான வீடியோ தெளிவாகவே இருந்தது. அதில் கடையிலிருந்து கொள்ளையடித்து வரும் ஒருவரின் கையில் 'யெல்லோ' என்ற பை இருப்பதைக் காண முடிந்தது. எனவே, இந்த சம்பவம் யெல்லோ ஸ்டோரில் நடந்திருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள, இந்த வீடியோ யெல்லோ ஸ்டோரில் நடந்த கொள்ளைதானா என்பதை அறிய சிட்டகாங்க, யெல்லோ என்று டைப் செய்து கூகுள் மேப்-ல் தேடினோம். சிட்டகாங்கில் இரண்டு இடங்களில் யெல்லோ ஸ்டோர் இருப்பது தெரிந்தது. ஸ்டிரீட்மேப் உதவியுடன் இந்த இடத்தை பார்த்தோம். ஆனால், அந்த இரண்டு கடைகளும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் ஒத்துப்போகவில்லை.

நமக்கு கிடைத்த ஃபேஸ்புக் பதிவில் முகமதுபூர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், கூகுள் மேப்பில் யெல்லோ, முகமதுபூர், வங்கதேசம் என்று டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற இடத்துடன் ஒத்துப்போன யெல்லோ ஸ்டோர் நமக்குக் கிடைத்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், On Fire என்று ஒரு கடை இருப்பதைக் காண முடிகிறது. கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் யெல்லோ ஸ்டோர் மற்றும் அதன் அருகில் ஆன் ஃபயர் என்ற பெயரில் உணவகம் இருப்பதும் தெரிந்தது. இந்த இடம் சிட்டகாங்கில் இல்லை, டாக்காவில் தான் இருக்கிறது என்பது உறுதியானது.

Google Map

கூகுளில் யெல்லோ, முகமதுபூர், கொள்ளை என்று டைப் செய்து தேடினோம். அப்போது யெல்லோ ஸ்டோர்களில் கொள்ளை நடந்திருப்பது தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது. அதில், பெக்சிம்கோ குழுமத்தின் (Beximco Group) இணை நிறுவனரும் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் தொழில்கள் மற்றும் முதலீடு ஆலோசகருமான சல்மான் எஃப் ரஹ்மானுக்கு சொந்தமான யெல்லோ ஷோரூம்களுக்கு தீவைக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் யெல்லோ நிறுவனத்தின் உரிமையாளர் இந்து மதத்தைச் சார்ந்தவர் இல்லை என்பது தெளிவாகிறது.

உண்மைப் பதிவைக் காண: tbsnews.net I Archive

இதை உறுதி செய்துகொள்ள Beximco Group உரிமையாளர் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, அந்த நிறுவனத்தின் இணையதள பக்கம் நமக்குக் கிடைத்தது. அதில், "Ahmed Sohail Fasihur Rahman மற்றும் Salman Fazlur Rahman ஆகிய இருவரும் இணைந்து இந்த நிறுவனத்தை 1970ம் ஆண்டு தொடங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதன் தலைவராக இருப்பவர் ஏ.எஸ்.எஃப் ரஹ்மான் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்துக்களின் கடையில் கொள்ளையடிக்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதும் தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: beximco.com I Archive

சல்மான் எஃப் ரஹ்மான் என்பவர் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் தொழில் மற்றும் முதலீடுகள் துறை தொடர்பான ஆலோசகராக இருந்துள்ளார். வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் உச்சத்தை அடைந்த போது ஷேக் ஹசீனாவின் கட்சியினர், ஆதரவாளர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. அந்த வகையில் ஷேக் ஹசீனாவின் ஆலோசகரின் நிறுவனத்தில் மக்கள் சூறையாடியுள்ளனர். இந்த வீடியோவை இந்துக்கள் கடையில் கொள்ளையடிக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆலோசகராக இருந்தவரின் நிறுவனத்துக்கு சொந்தமான கடையை கலவரக்காரர்கள் சூறையாடிய வீடியோவை இந்து கடையை சூறையாடிய இஸ்லாமியர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் இந்துக்களின் கடைகளில் கொள்ளையடிக்கும் முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False