"உங்கள் வீட்டிற்குள் நுழைந்து பணத்தை எடுத்து முஸ்லிம்களுக்கு வழங்குவோம்" என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினாரா?
உங்கள் வீட்டிற்குள் காங்கிரஸ்காரர்கள் நுழைந்து அலமாரியை உடைத்து பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு வழங்குவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "காங்கிரஸ்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? காங்கிரஸ் கட்சிக்காரர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து அலமாரியை உடைத்து, பணத்தை எடுத்து மற்றவர்களுக்கு... குறிப்பாக முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடுவார்கள்" என்பது போல பேசுகிறார். நிலைத் தகவலில், "காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த வீடியோவில் தெளிவாக கூறுகிறார் :
"காங்கிரஸ்காரர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து, அலமாரிகளை உடைத்து, பணத்தை வெளியே எடுத்து, அதிக குழந்தைகளை பெற்ற முஸ்லிம்களுக்கு விநியோகிப்பார்கள்.
இந்துக்கள் குறைவான குழந்தைகளை பெறுவதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" இந்த வீடியோவை முடிந்தவரை பகிருங்கள். ஒருவேளை இது மதச்சார்பற்ற இந்துக்கள் மற்றும் காங்கிரஸ், இண்டி கூட்டணியில் உள்ள இந்துக்களின் கண்களை திறக்கலாம்.." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரடியாக மக்களிடம் அதுவும் இந்துக்களிடம் உங்கள் வீட்டைக் கொள்ளையடித்து முஸ்லிம்களுக்கு வழங்குவோம் என்று கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். யாராவது உண்மையில் இப்படிப் பேச முடியுமா, வீட்டுக்குள் நுழைந்து அலமாரியை உடைத்து பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு வழங்குவேன் கூறமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை இது எடிட் செய்யப்பட்ட வீடியோவாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2024 மே மாதம் 3ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசிய காட்சிகளுடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஒத்துப்போனது. அந்த வீடியோவை பார்த்தோம். வீடியோவின் 32.25வது நிமிடத்தில் நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு இருந்தது. அதில் வீட்டுக்குள் நுழைந்து, அலமாரியை உடைத்து பணத்தை எடுத்து என்று மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
வீடியோவை சற்று முன்னோக்கி நகர்த்தி பார்த்தோம். அப்போது, 32.22வது நிமிடத்தில் மோடி சொல்கிறார் என்று அவர் கூறியதை கேட்க முடிந்தது. அதாவது, காங்கிரஸ்காரர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து பணத்தை எடுத்து முஸ்லிம்களுக்கு கொடுப்பார்கள் என்று மோடி கூறுகிறார் என்று மல்லிகார்ஜுனா கார்கே கூறியிருப்பது தெளிவானது. அதில், மோடி சொல்கிறார் என்ற முக்கியமான பகுதியை மட்டும் அகற்றிவிட்டு, மல்லிகார்ஜுன கார்கே கூறியது போன்று விஷமத்தனத்தடன் பதிவிட்டிருப்பது தெளிவாகிறது.
உண்மைப் பதிவைக் காண: dailythanthi.com I Archive 1 I thehindu.com I Archive 2
2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துப் பேசிய நரேந்திர மோடி, தனிநபர்களின் சொத்துக்களை அதிக குழந்தை பெற்றவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) காங்கிரஸ் கட்சி அளித்துவிடும், அயோத்தியில் ராமர் கோவிலைக் கூட இடித்துவிடும் என்று பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
நம்முடைய ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பதிலை எடிட் செய்து, மோடி கூறுகிறார் என்ற பகுதியை நீக்கிவிட்டு சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் காங்கிரஸ்காரர்கள் உங்களின் வீட்டுக்குள் நுழைந்து அலமாரியை உடைத்து பணத்தை எடுத்து முஸ்லிம்களுக்கு வழங்குவார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மக்களின் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு வழங்குவோம் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக பரவும் வீடியோ முழுமையானது இல்லை என்பதும் நரேந்திர மோடி அவ்வாறு கூறுகிறார் என்று அவர் பேசியதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…