FACT CHECK: தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி உ.பி.,யில் கழிப்பிடம் இடிக்கப்பட்டதா?
உத்தரப் பிரதேசத்தில் பெண்கள், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக கழிப்பறை இடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பியபடி கழிப்பறை இடிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் யாரும் கழிப்புடத்தை உபயோக படுத்தகூடாது என்று சங்கிகள் உடைக்கும் காட்சி, தாழ்த்த பட்ட பெண்கள் திறந்தவெளியில்தான் போக வேண்டுமாம், இதில் என்ன கொடுமை என்றால் கொலை செய்யும்போதும் சரி தவறான செயலில் ஈடுபடும்போது சரி சாமி பெயரை சொல்லி செய்கிறார்கள் இந்த சங்கி கும்பல்!!!!!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Usman Khan என்பவர் 2021 ஜனவரி 24 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேசம் சஹரன்பூர் பஸ் நிலையத்தில் கோவிலுக்கு அருகே கழிப்பறை இருந்ததால் அதை தீவிர வலதுசாரிகள் இடித்தார்கள் என்று வீடியோக்கள் பரவின. அப்போது அதை ஆய்வு செய்தபோது அந்த தகவல் உண்மைதான் என்பதால் நாம் அதை விட்டுவிட்டோம். ஆனால், அதே வீடியோவுடன் கூடுதலாக சில தகவல் சேர்த்து தற்போது சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
பெண்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள் கழிப்பறையை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக கழிப்பறை இடிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கழிப்பறையை பார்க்கும் போது ஆண்கள் சிறுநீர் கழிக்கும் இடம் என்பது தெரிகிறது. திறந்த வெளியில் சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவல் தொடர்பாக வெளியான செய்தியை மீண்டும் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் நமக்கு கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்தோம்.
ட்விட்டர் பதிவர் ஒருவர் கழிப்பிடம் இடிக்கப்படம் பல வீடியோக்களை பதிவிட்டிருந்தார். மேலும், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியையும் அவர் அதில் சேர்த்திருந்தார். அதில், உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் பஸ் நிறுத்தத்தில் கோவிலுக்கு அருகே இருந்த கழிப்பிடத்தை பஜ்ரங் தள் மற்றும் இதர இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடித்தனர். இது தொடர்பாக பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியும் அளித்தனர்.
அதில், "கோவிலுக்கு மிக அருகில் கழிப்பிடம் இருப்பது தங்கள் மத உணர்வு புண்படும் வகையில் உள்ளது. எனவே, கழிப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சஹரன்பூர் நகராட்சிக்கு பல முறை கோரிக்கை விடுத்தோம். அவர்கள் நிறைவேற்றாததைத் தொடர்ந்து கழிப்பறையை இடித்தோம்" என்று கூறியிருந்தனர். பெண்கள் கழிப்பிடமும் இடிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: timesofindia.indiatimes.com I Archive 1 I freepressjournal.in I Archive 2
இது தொடர்பாக வெளியான செய்தியில், "கோவிலுக்கும் கழிப்பறைக்கும் இடையே வெறும் மூன்று அடி இடைவெளியே உள்ளது. அதே நேரத்தில் இந்த கழிப்பறை 40 ஆண்டுகளாக உள்ளது. சமீபத்தில்தான் அது புதுப்பிக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக எந்தவித எதிர்ப்பும் இல்லை. திடீரென்று கழிப்பறையை இடித்துள்ளனர்" என நகராட்சி தரப்பில் கூறியதாக இருந்தது.
"பஸ் நிலையத்தில் இருந்த ஆண், பெண் கழிப்பறையை இடித்தவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் அளித்த புகார் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சஹரன்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் வினீத் பட்நாகர் கூறினார் என குறிப்பிட்டிருந்தது.
இதன் மூலம் கோவிலுக்கு அருகில் கழிப்பறை இருந்ததால் இடிக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. பெண்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள் திறந்த வெளியில்தான் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டும் என்று பெண்கள் கழிப்பறை மட்டும் இடிக்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் கழிப்பறை பயன்படுத்தக் கூடாது என்று கழிப்பறையை இடித்தார்கள் என்று பகிரப்படும் தகவல் நம்பகமானது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி உ.பி.,யில் கழிப்பிடம் இடிக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Partly False