
விவசாயிகள் மோடியின் உருவ பொம்மையை செருப்பால் அடிக்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
சீக்கியர்கள் பிரதமர் மோடி உருவ பொம்மையை செருப்பால் அடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கார்ப்பரேட் அடிமை மோடிக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் கடும் கோபம்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Muji Ijum என்ற ஐடி நபர் 2020 செப்டம்பர் 21 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மோடிக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் கடும் கோபம் என்று இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
வீடியோ காட்சியைப் பார்த்தபோது ஒரு சிலர் தவிர்த்து மற்ற எல்லோரும் பேன்ட், ஷர்ட் போட்டு இருந்தனர். யாரும் மாஸ்க் அணியவில்லை. மோடி உருவ பொம்மையைப் பார்க்கும் போது அமெரிக்காவில் உள்ள சிறை கைதிகள் உடை போல அணிவிக்கப்பட்டு இருந்தது. எல்லோர் கையிலும் மஞ்சள் மற்றும் நீல நிற கொடி இருந்தது. எனவே, இது தற்போது நடந்த போராட்டத்தின் வீடியோதானா என்ற சந்தேகம் எழுந்தது.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது. எனவே, இது சமீபத்தில் பஞ்சாபில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.
யூடியூப் பதிவு ஒன்றில் இது 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. சில வீடியோக்களில் தனி நாடு கோரி போராட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
வீடியோவில் வரும் சிறுவன் ஒருவனின் டி-ஷர்ட்டில் 2020 என்ற வார்த்தை மட்டும் தெளிவாக தெரிகிறது. கொடிகளில் சீக்கியர்கள் பிரிவினைவாத கோரிக்கை தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
இதன் அடிப்படையில் தேடியபோது, 2019ம் ஆண்டு வாஷிங்டன் டி.சி-யில் சீக்கியர்கள் நடத்திய வாக்கெடுப்பு 2020 பேரணி என்று நிகழ்ச்சி நடந்திருப்பது தெரிந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைகளில் மஞ்சள் மற்றும் நீல நிற கொடிகள் இருப்பதை காண முடிந்தது.
அந்த பேரணியில் பங்கேற்றவர்கள் டி-ஷர்ட்களில் பஞ்சாப் ரெஃபராண்டம் 2020 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த டி-ஷர்ட்டும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் உள்ள சிறுவன் அணிந்திருந்த டி-ஷர்ட்டும் ஒன்றுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
இதன் அடிப்படையில் 2019ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியின் வீடியோவை தற்போது 2020 செப்டம்பர், அக்டோபரில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ உண்மையில் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம். சீக்கியர்கள் போராட்டம் என்பது இந்தியாவுக்கு எதிரானது என்பதால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் இணையதள பக்கம் இந்திய அரசால் இந்தியாவில் செயல்பட முடியாதபடி முடக்கப்பட்டு இருந்தது. பல ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக பதிவுகள், போராட்ட அமைப்பு இணையதளங்கள் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாதபடி தடை செய்யப்பட்டு இருந்தன.
வேளாண் மசோதா என்பது செப்டம்பர் 2020ல் கொண்டு வரப்பட்டது. அதற்கு செப்டம்பர் 27ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டதில் இருந்து போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய ஆய்வில்,
இந்த வீடியோ சீக்கியர்கள் தனி நாடு கோரி நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2019 ம் ஆண்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
விவசாயிகள் மசோதா மற்றும் சட்டம் 2020ம் ஆண்டு கொண்டு வரப்பட்டவை. அதற்கு முன்பே இந்த வீடியோக்கள் வந்திருப்பது உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில் இந்த வீடியோ பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது எடுத்தது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்த வீடியோ விவசாயிகள் போராட்டத்தின் போது எடுத்தது இல்லை, சீக்கியர்கள் தனி நாடு கோரி நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:விவசாய சட்டத்தை எதிர்த்து மோடி உருவ பொம்மை மீது தாக்குதலா?
Fact Check By: Chendur PandianResult: False
