ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று அனுதாபம் தேட முயன்றதா உக்ரைன்?

சமூக ஊடகம் சர்வதேசம்

ரஷ்யத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று உடல்களை அடுக்கிவைத்து உக்ரைன் அனுதாபம் தேட முயன்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இறந்தவர்கள் உடல்கள் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டது போல் உள்ளது. ஒரு பையிலிருந்து ஒருவர் உயிரோடு எழுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. Demo Gegen klimapolitik என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

நிலைத் தகவலில், “உக்ரைன் தொலைகாட்சியில், ரஷ்ய படை பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உலக நாடுகள் அனுதாபம் பெற ஏமாற்றும் காட்சி, இறந்த ஒருவர் எழும் காட்சி. நம்ம திமுக காங்கிரஸ் ஊடகங்கள் அங்கும் செயல்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை Sriramajayam Rmt என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மார்ச் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவை பார்க்கும் போது உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டது போல உள்ளது. அதே நேரத்தில் அருகில் சிலர் பேனர் பிடித்தபடி இருப்பதால் இது ஏதும் போராட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், “Demo Gegen klimapolitik” என்ற வார்த்தை ஆங்கிலம் இல்லை. வேறு மொழி போல இருந்தது. அதே நேரத்தில் Demo என்பது போராட்டத்தைக் குறிப்பது போல இருந்தது. எனவே, அந்த வார்த்தையைக் கூகுள் டிரான்ஸ்லேட்டரில் டைப் செய்து தேடினோம். அப்போது அது ஜெர்மனி மொழி என்று தெரிந்தது. மேலும் பருவநிலை மாற்றம் கொள்கைக்கு எதிரான போராட்டம் என்று மொழிபெயர்ப்பில் தெரியவந்தது. 

உண்மைப் பதிவைக் காண: noen.at I Archive

தொடர்ந்து, அந்த வீடியோவை பற்றித் தேடினோம். அப்போது அந்த வீடியோ 2022 பிப்ரவரி 4ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் உள்ள தகவல் அடிப்படையில் கூகுளில் தேடினோம்.

அப்போது பிப்ரவரி 4ம் தேதி வெளியான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், பருவநிலை மாற்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வலிமையான கொள்கைகளை ஏற்படுத்த வலியுறுத்தி ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 49 பேர் இறந்த உடல்கள் போல படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று செய்திகள் கிடைத்தன. இதன் மூலம் பருவநிலை மாற்றம் தொடர்பாக நடந்த போராட்டத்தின் வீடியோவை எடுத்துவந்து ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த மக்கள் உடல் என்று உக்ரைன் அனுதாபம் தேட முயல்கிறது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

Archive

முடிவு:

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று உயிருடன் உள்ளவர்களை வைத்து அனுதாபம் தேட உக்ரைன் முயற்சிக்கிறது என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று அனுதாபம் தேட முயன்றதா உக்ரைன்?

Fact Check By: Chendur Pandian 

Result: False