
‘’பிரான்ஸ் நாட்டில் போலீசாரை தாக்கும் முஸ்லீம்கள்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
நவம்பர் 5, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், போலீஸ் வாகனங்களை பொதுமக்கள் தாக்குவதைப் போலவும், பின்னர் அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிப்பது போலவும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
அதன் கீழே, ‘’ அனுபவிங்கடா பிரான்ஸ் நாட்டு கத்தோலிக்கர்களே காஷ்மீரில் இந்தியாவுக்கு பாடம் எடுத்தீர்களே அன்பு மார்க்கம் அமைதிமார்க்கம் என்று அங்கும் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார்கல்!,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உண்மையில், இந்த வீடியோ ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில், சமீபத்தில் நிகழ்ந்ததாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளும் ஊரடங்கை பின்பற்றி வருகின்றன. இதனை ஒட்டி ஊரடங்கு விதிமுறைகளை மீறி, பார்சிலோனா நகரில் பொதுமக்கள் சிலர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அந்த வீடியோவைத்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்து, பிரான்ஸ் போலீசாரை தாக்கும் முஸ்லீம்கள், என்று வதந்தி பரப்பியுள்ளனர்.
உண்மையான வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதுபற்றி The Daily Mail ஊடகம் விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், இதுதொடர்பான வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் நிறைய பகிரப்பட்டுள்ளன. அந்த செய்தி லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
இதுதவிர, குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற தெருவின் பெயர் Via Laietena ஆகும். இது பார்சிலோனாவில் உள்ளது என்பதை கூகுள் மேப் தேடலின் மூலமாக, ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதுபற்றி நமது ஆங்கில பிரிவினர் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளனர். அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
FactCrescendo English News Link
எனவே, பார்சிலோனா நகரில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வை தற்போதைய பிரான்ஸ் அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. அத்துடன், இவர்கள் இந்த பிரச்னைக்கு மூலகாரணம் என்று கூறி கனடா நாட்டில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தின் வீடியோவையும் இணைத்து, ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்பியுள்ளனர்.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பிரான்ஸ் நாட்டில் போலீஸ் வாகனங்களை தாக்கும் முஸ்லீம்கள்- வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
