தமிழ்நாடு அரசு ரூ.5,725க்கு ஒரு கிராம் தங்கம் வாங்க டெண்டர் அறிவிப்பு வௌியிட்டதா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரத்தை ரூ.5,725க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் (ஒப்பந்தபுள்ளி) அறிவிப்பை வெளியிட்டதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு. ஒரு கிராம் தங்கம் ரூ.5,725-க்கு கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிப்பு. இன்று(ஜூலை 14) முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15 ஆம் தேதி தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டம் தொடங்கும் என அறிவித்துள்ள முதலமைச்சர். ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்த அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் போடப்படும் என்று தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க மோதிரம் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த டெண்டர் அறிவிப்பை சரியாக புரிந்துகொள்ளாமல் ஊடகங்கள் செய்தி வௌியிட, அதை நெட்டிசன்கள் குறிப்பாக எதிர்க்கட்சியைச் சார்ந்த சமூக ஊடக ஆர்வலர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால், “அரசின் டெண்டரில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரங்களை (22 காரட்/916) விநியோகிப்பதற்கான ஒப்பந்தம்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

Archive

டெண்டர் அறிவிப்பின் கடைசி பகுதியில் ரூ.5,725 என்று குறிப்பிட்டிருந்தனர். அதுவே குழப்பத்திற்குக் காரணமாக மாறிவிட்டது. நமக்கும் அது என்ன ரூ.5,725 என்று புரியவில்லை. அதே நேரத்தில் 22 காரட் தங்கம் ரூ.13 ஆயிரத்திற்கு விற்கும் நிலையில் ரூ.5725க்கு வாங்க வாய்ப்பில்லை என்பதால் அரசின் ஒப்பந்தப்புள்ளிகளை எடுப்பவர்களிடம் கேட்டோம்.

நம்மிடம் பேசிய அரசு டெண்டர் எடுப்பவர்கள் அது டெண்டர் விண்ணப்பத்திற்கான கட்டணம் என்றனர். டெண்டர் அறிவிப்பிலேயே டாக்குமெண்ட் காஸ்ட் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலேயே அதை குறிப்பிட்டுவிட்டதால் கீழே தனியாக குறிப்பிடத் தேவையில்லை என்று விட்டுவிட்டனர். வழக்கமாக டெண்டர் எடுப்பவர்களுக்கு இது புரியும். திடீரென்று பார்ப்பவர்களுக்கு இது புரியாமல் போயிருக்கலாம்” என்றனர்.

மேலும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்தின் முந்தைய டெண்டர் தொடர்பான அறிவிப்புகளையும் இணையத்திலிருந்து எடுத்து நமக்கு அளித்தனர். அதில் டெண்டர் ஆவணத்தின் விலை ரூ.5,725 என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. தங்க மோதிரம் தொடர்பான டெண்டர் அறிவிப்பில் அதை தெளிவாக குறிப்பிடாமல் விட்டதன் விளைவு சில ஊடகங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: slideshare.net I Archive

முன்னதாக தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளன்று தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ரூ.755.83 கோடியில் 4.41 லட்சம் ஒரு கிராம் தங்க மோதிரம் வாங்கப்படும். அந்த தங்க மோதிரம் 22 காரட் தரத்தில் 916 தர சான்றிதழுடன் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கணக்குப் படி பார்த்தாலும் கூட கிட்டத்தட்ட ஒரு மோதிரத்தின் விலை 17 ஆயிரம் ரூபாய் என்று வருகிறது. டெண்டர் ஆவணங்களை வாங்கினால் மட்டுமே இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய முடியும். எனவே, ரூ.5725க்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெண்டர் ஆவணத்தின் விலை என்று குறிப்பிடப்பட்டத்தை தங்க மோதிரத்தின் விலை என்று தவறாக புரிந்து வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: தமிழ்நாடு அரசு ரூ.5,725க்கு ஒரு கிராம் தங்கம் வாங்க டெண்டர் அறிவிப்பு வௌியிட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply