
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது வெனிசுலா நிலநடுக்கத்தின் போது பதிவான காட்சியா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஆங்கிலத்தில் வெனிசுலா நிலநடுக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7.1 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவு இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குண்டு வீசப்பட்டதை போல அந்த நாடே உருக்குலைந்து போயுள்ளது. நூற்றுக்கணக்கான கட்டங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் சிதைந்து போயுள்ளன. இந்த பாதிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வெனிசுலா நாட்டில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் வெனிசுலா நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வெனிசுலா கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் நாடு. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இஸ்லாமியர்களின் சின்னமான பிறை நட்சத்திர அலங்கார விளக்கு உள்ளது. எனவே, இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது வெனிசுலா நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு பலரும் இதை பகிர்ந்திருப்பதாகத் தேடுதல் முடிவு காட்டியது. இவற்றுக்கு இடையே பிப்ரவரி 6, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்த யூடியூப் வீடியோ ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மிகவும் நம்பிக்கைக்குரிய சர்வதேச ஊடகங்களான New York Post, Guardian News உள்ளிட்ட பல ஊடகங்களின் யூடியூப் பக்கங்களிலும் கூட இந்த வீடியோ 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அனைத்துமே துருக்கி நிலநடுக்க காட்சி என்று குறிப்பிட்டிருந்தன. இவை எல்லாம் இந்த வீடியோ 2026 ஜூன் மாதம் வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவான வீடியோ காட்சி இல்லை என்பதை உறுதி செய்தன. https://youtu.be/BpwJeXrC5Kg
முடிவு:
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவான வீடியோவை வெனிசுலாவில் எடுக்கப்பட்டது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


