இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி ரஜினிகாந்த் பிரசாரம் செய்ததாக பரவும் புகைப்படம் உண்மையா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி ரஜினிகாந்த் பேனர் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ரஜினிகாந்த் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய பதாகையை உயர்த்தி பிடித்திருப்பது போன்று புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “தமிழக மக்கள் தினம்தோறும் எந்த ஒரு அச்சமின்றி சுதந்திரமாக வாழ வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி ரஜினிகாந்த் கூறியது போன்று ஒரு புகைப்படத்தை பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடியபோது, இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. கொரோனா பரவலின் போது மெழுகுவர்த்தி ஏந்தி ரஜினிகாந்த் அளித்த புகைப்பட போஸை எடிட் செய்து, இரட்டை இலை சின்னம் பேனரை பிடித்திருப்பது போல் மாற்றியிருப்பது தெரியவந்தது.

Archive

2020ம் ஆண்டில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் மின் விளக்குகளை அணைத்து, விளக்குகளை ஏற்றும்படி மோடி அழைப்பு விடுத்திருந்தார். அப்போது திரை உலக பிரமுகர்கள், தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினர்.

அப்போது, “பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் மனைவி லதாவுடன் மெழுகுவர்த்தி ஏற்றினார். பின்னர், ரஜினிகாந்த், தனது வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி கையில் உயர்த்திப் பிடித்து நின்று ஒற்றுமையை வெளிப்படுத்தினார்” என்று புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.

அது மட்டுமின்றி ரஜினிகாந்த் விளக்கேற்றியதன் வீடியோவையும் தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சியையும் காண முடிந்தது. இதன் மூலம் கொரோனா காலத்து புகைப்படத்தை எடுத்து, அதிமுக-வுக்கு வாக்களிக்கும்படி ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தது போன்று வதந்தி பரப்பியிருப்பது தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி பேனர் ஏந்தி பிரசாரம் செய்த நடிகர் ரஜினிகாந்த் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி ரஜினிகாந்த் பிரசாரம் செய்ததாக பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered

Leave a Reply