
இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பா.ஜ.க மட்டுமே என்று அஜித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
2019ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நடிகர் அஜித் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பாஜக மட்டுமே நடிகர் அஜித்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Karthick Bavani என்பவர் 2020 பிப்ரவரி 12ம் தேதி வெளியிட்டுள்ளார். 450க்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இஸ்லாமிய மன்னர்கள், கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கூட இந்து மதத்தை அசைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மிகவும் வலுவான மதமான, வாழ்க்கை முறையாக இந்து மதம் உள்ளது. ஆனால், சமீப காலமாக பெரும்பான்மையான மக்கள் இந்துக்களாக உள்ள இந்தியாவில் இந்து மதத்துக்கு ஆபத்து என்று பிரசாரம் செய்யப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட ஒரு கட்சிதான் இந்து மதத்தைப் பாதுகாக்க வந்தது போலவும் மற்ற கட்சியில் உள்ள இந்துகள் எல்லாம் இந்துக்களே இல்லை என்ற அளவிலும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
அதுபோலத்தான், இந்து மதத்துக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பா.ஜ.க மட்டுமே என்று அஜித் கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பா.ஜ.க, இந்து மத பாதுகாப்பு தொடர்பான அரசியலுக்குள் நாம் செல்ல விரும்பவில்லை. இந்த கருத்தை அஜித் கூறினாரா இல்லையா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம்.
2019ம் ஆண்டு அஜித் ரசிகர்கள் சிலர் பா.ஜ.க-வில் இணைந்தனர். அப்போது தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் அஜித் ரசிகர்கள் அனைவரும் மோடியின் சிறப்புக்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், “எனது உண்மை ரசிகர்கள் யாரும் பா.ஜ.க போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணையமாட்டார்கள்” என்று அஜித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆனது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றிய பேச்சுக்கள் மத்தியில் இந்த ஆண்டு மீண்டும் இந்த நியூஸ் கார்டு வைரல் ஆனது. இது போலியான நியூஸ் கார்டு என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
Ns7.tv | Archived Link |
இந்த நிலையில் அதேபோன்றதொரு நியூஸ் கார்டை மீண்டும் எடிட் செய்து சிலர் பகிர்ந்து வருகின்றனர். இதைப் பார்க்கும்போதே போலியானது என்று தெரிகிறது. ஆனாலும், இது உண்மை என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். பலரும் இது உண்மையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, இது போலியானது என்று உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

இந்த நியூஸ் கார்டு வெளியான 2019 ஜனவரி 21ம் தேதி அஜித் வெளியிட்ட அறிக்கையை தேடி எடுத்தோம். அதில் எந்த இடத்திலாவது பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து கூறியுள்ளாரா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு கருத்தும் அதில் இல்லை.
Archived Link |
இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் இணைப் பிரிவுக்கு அனுப்பி கருத்து கேட்டோம். அதற்கு அவர்கள் இது போலியானது என்று பதில் அளித்தனர்.
நம்முடைய ஆய்வில்,
இதே போன்று போலி நியூஸ் கார்டு முன்பு பரவியது பற்றி கட்டுரை வெளியிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
குறிப்பிட்ட நாளில் வெளியான அஜித் பேட்டியில், பா.ஜ.க-வுக்கு ஆதரவான எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை.
இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பா.ஜ.க-தான் என்று அஜித் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் பா.ஜ.க என்று அஜித் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
