பா.ஜ.க-வை கீழ்த்தரமான கட்சி என்று கூறினாரா நடிகர் அஜித்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

“எனது உண்மை ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள்” என்று நடிகர் அஜித்குமார் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நடிகர் அஜித் படத்துடன் கூடிய, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “எனது உண்மையான ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள் – நடிகர் அஜித்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எனது ரசிகர் கள் யாரும் கழிசடை பீ..சப்பி கட்சியை ஆதரிக்கவே மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப்பதிவை Jeevanandam Mahesh என்பவர் 23 ஜனவரி 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

தந்தை பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக சமூக ஊடகங்கள், செய்தி ஊடகங்களில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றது. இந்த சூழலில் நடிகர் அஜித்குமார் என்னுடைய ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள் என்று குறிப்பிட்டதாக பகிரப்பட்டு வருகிறது. 

இந்த நியூஸ் கார்டில், கடந்த 2019 ஜனவரி 21-ம் தேதி வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்த நியூஸ் கார்டு பார்க்கும் போது வழக்கமாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. இதன் தமிழ் ஃபான்ட் மற்றும் வடிவமைப்பு வழக்கமான நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு போல இல்லை. இதைப் பார்க்கும்போது போலியானது என்று நமக்குத் தெரிந்தது. ஆனாலும் பலரும் கமெண்ட் பகுதியில் இது உண்மை என்ற அளவில் கருத்து தெரிவித்து வருவதை காணமுடிந்தது. மேலும் மிக அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. எனவே இந்த நியூஸ் போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவருக்கு அனுப்பி இது நீங்கள் வெளியிட்டது தானா என்று கேட்டோம். அதற்கு அவர் “இது நாங்கள் வெளியிட்டதில்லை. போலியான நியூஸ் கார்டு” என்று உறுதி செய்தனர். 

கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டத்தில் சில அஜித் ரசிகர்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். அந்த நேரத்தில், அஜித் ஏதேனும் கருத்து தெரிவித்தாரா… அதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டை போலியாக உருவாக்கியுள்ளார்களா என்று கண்டறிய கூகுளில் தேடினோம்.

அப்போது திருப்பூர் விவகாரம் தொடர்பாக 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் சூடான விவாதங்கள் நடந்தது தெரிந்தது. திருப்பூரில் அஜித் ரசிகர்கள் பா.ஜ.க-வில் இணைந்தபோது அப்போது தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் “அஜித் ரசிகர்கள் இனி பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார்.

Ns7.tvArchived Link

இதனால் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து அஜித் விளக்கம் அளித்திருந்தார். அஜித் வெளியிட்டிருந்த அறிக்கையை அப்படியே நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது. அதில் எந்த இடத்திலும் “எனது உண்மையான ரசிகர்கள் யாரும் பா.ஜ.க போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணையமாட்டார்கள்” என்று கூறவில்லை. அந்த அறிக்கையில், “எனக்கும் அரசியலில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. ஆனால், அதை என் ரசிகர்கள் மீது திணித்ததில்லை. என்மேல் திணிக்கவும் விட்டதில்லை” என்று கூறியிருந்தார்.

Archived Link 1cinema.vikatan.comArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் நிலைப்பாடு பற்றி அஜித் கூறிய அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது.

அஜித் வெளியிட்ட முழு அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “எனது உண்மையான ரசிகர்கள் யாரும் பா.ஜ.க போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணையமாட்டார்கள்” என்று அஜித் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பா.ஜ.க-வை கீழ்த்தரமான கட்சி என்று கூறினாரா நடிகர் அஜித்?

Fact Check By: Chendur Pandian 

Result: False