திருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்ததா அன்னை தெரசா அறக்கட்டளை?

அரசியல் சமூக வலைதளம்

‘’திருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்த அன்னை தெரசா அறக்கட்டளை,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

Sri Nithya Veera Badhrananda என்பவர் இந்த பதிவை ஆகஸ்ட் 26, 2018 அன்று பகிர்ந்துள்ளார்.  இதில், வங்கி காசோலை ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து பெற்ற 10 கோடி ரூபாய் நிதி,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்தியா முழுக்க பாஜகவை விமர்சிப்பவர்களை கிறிஸ்தவ கைக்கூலி அல்லது பாகிஸ்தான் கைக்கூலி, தேசத் துரோகி, சீன கைக்கூலி உள்ளிட்ட பல்வேறு அடைமொழிகளில் பாஜக ஆதரவாளர்கள் விமர்சிப்பது வழக்கமாக உள்ளது. சமூக வலைதளம் தொடங்கி, பல்வேறு இடங்களிலும் இதனை நேரடியாகக் காண முடிகிறது.

இதேபோல, மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி ஒரு கிறிஸ்தவ கைக்கூலி, அவரது உண்மையான பெயர் டேனியல் எனவும் கூறி, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது உண்டு. இதற்கு திருமுருகன் காந்தியே கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவும் பகிரப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தியை ஒரு கிறிஸ்தவக் கைக்கூலி என சித்தரிப்பதன் நோக்கத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் பகிரப்பட்டுள்ள காசோலை போலியானதாகும்.

ஆம், அதில் உள்ள எழுத்துகள் (ஃபான்ட்) ஒரே சீராக இல்லாமல், ஆங்காங்கே இருந்து கட், காப்பி செய்யப்பட்டவை என தெளிவாக தெரியவருகிறது. இதேபோல, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கொல்கத்தா கிளை ஒன்றின் முகவரியை குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ISFC எண் வரும் இடத்தில், SBIN என தொடங்காமல், DBI என தொடங்குகிறது.

இதேபோல, இந்த காசோலையின் MICR (Magnetic Ink Character Recognition) எனப்படும் மாவட்டம்/ நகரம்/ வங்கி/ கிளை குறியீட்டு எண் 695002032 என உள்ளது. இதனை ஆய்வு செய்தபோது, இது கேரளாவில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளை என தெரியவந்தது. ஆனால், நாம் ஆய்வு செய்யும் காசோலையின் மேலே கொல்கத்தா கிளையின் முகவரியை குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி முன்னுக்குப் பின் முரணான வகையில் ஃபோட்டோஷாப் செய்து போலியான காசோலையை தயாரித்துள்ளனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சுய அரசியல் லாபத்திற்காக, இத்தகைய போலி காசோலை தயாரித்து, திருமுருகன் காந்தி பெயரில் சிலர் பகிர்ந்துள்ளதாக, உறுதியாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்ததா அன்னை தெரசா அறக்கட்டளை?

Fact Check By: Pankaj Iyer 

Result: False