இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சீன பெண்களுடன் பொழுது போக்கினாரா?
1962ம் ஆண்டு இந்தியா - சீனா போர் நடந்த போது சீன பெண்களுடன் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சுமூகமாக பேசியபோது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்தியாவின் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் கிருஷ்ண மேனன் பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் அருகிலேயே அந்த புகைப்படம் பற்றிய குறிப்பும் ஆங்கிலத்தில் உள்ளது.
நிலைத் தகவலில், "1962 ல சீனாவிடம் இந்தியா ஏன் தோற்றதுன்னு படம் பார்த்தாலே தெரியுது.காங்கிரஸ் கட்சிய சேர்ந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் சீன பெண்களுடன் சுமூகமாக பேசியபோது கிளிக் யது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Durai Kolanjinathan என்பவர் 2020 ஜூலை 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
நமக்கு இந்த புகைப்படம் பற்றிய தகவலை தேடும் வாய்ப்பைக் கூட அளிக்காமல், ஆதாரத்தோடு படத்தை பகிர்ந்துள்ளார்கள். ஹிஸ்டிரிஇமேஜ் என்ற தளத்தில் இருந்து இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர். புகைப்படம் பற்றிய குறிப்பும் அதனுடன் இணைந்து வாட்டர்மார்க் செய்யப்பட்டுள்ளது. இதனால், புகைப்பட குறிப்பை தனியாக சேர்த்துவிட்டார்கள் என்று கூற முடியாது.
புகைப்பட குறிப்பை படித்துப் பார்த்தபோது இந்த புகைப்படம் 1955ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி வாஷிங்டனில் ஐ.நா-வுக்கான இந்தியத் தூதராக கிருஷ்ண மேனன் இருந்த போது எடுத்த படம் என்று தெரிந்தது. கிருஷ்ண மேனன் 1952ம் ஆண்டு வரை இங்கிலாந்துக்கான ஹை கமிஷனராக இருந்தார். அதன் பிறகு ஐ.நா சபைக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். அதாவது இந்த புகைப்படம் எடுக்கும்போது அவர் அமைச்சர் இல்லை என்பது உறுதியாகிறது.
படத்தில் உள்ளது சீனப் பெண்களா என்று கூட ஆய்வு செய்ய வேண்டிய தேவையில்லை, அந்த படத்திலேயே இந்த பெண்கள் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவர்கள் என்றும், தனியார் ஸ்விம்மிங் பார்டியில் பங்கேற்றபோது எடுத்த படம் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த பெண்கள் சீனப் பெண்கள் இல்லை என்பது தெளிவாகிறது. இதன் மூலம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
இந்த புகைப்படம் மற்றும் ஃபுட்நோட் குறிப்பிட்ட இணைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை மட்டும் நிரூபிக்க வேண்டியிருந்ததால் அந்த தளத்தில் புகைப்படத்தை தேடினோம். outlet.historicimages.com இணையதளத்தில் கிருஷ்ண மேனன் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடியபோது அவருடைய படங்கள் பல கிடைத்தன. அதில் இரண்டாவது படமாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் இருந்தது.
அதில் படம் பற்றிய குறிப்பு, அசோசியேட் பிரஸ் இதை வெளியிட்டது தொடர்பான தகவல் கிடைத்தது. வி.கே.கிருஷ்ண மேனன் எப்போது பாதுகாப்புத் துறை அமைச்சரானார் என்று தேடியபோது, அவர் 1957ம் ஆண்டுதான் அமைச்சராக பொறுப்பேற்றார் என்று தெரிந்தது. அதாவது சீன போருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பாக, அமைச்சராவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
வி.கே.கிருஷ்ணமேனன் மறைந்து 46 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்படுகின்றன. வி.கே.கிருஷ்ண மேனனைப் பற்றி படித்த போது காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக இவர் ஐ.நா சபையில் எட்டு மணி நேரம் வாதாடியவர் என்று தெரியவந்தது. இதுவரையில் ஐ.நா சபையில் இவரது எட்டு மணி நேர உரையாடல் சாதனையை யாரும் முறிக்க முடியவில்லை என்று தெரிந்தது. 1961ம் ஆண்டு கோவாவை இந்தியாவுடன் இணைக்கும் ராணுவ முயற்சி இவரது தலைமையின் கீழ் செயல்படுத்தப்பட்டது என்று தெரிந்தது.
சீன போர்க் காலத்தில் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால், இந்தியா ராணுவ சக்திமிக்க நாடாக விளங்க இவரது பங்கு முக்கியமானது என்று பலரும் கருத்து தெரிவித்திருப்பது தெரிந்தது. தனிப்பட்ட வாழ்க்கை அவர் விருப்பம் போல செயல்பட்டாலும் அரசின் பிரதிநிதியாக, கொஞ்சம் கூட சமரசமற்றவராக விளங்கினார் என்று இவரைப் பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் குறிப்பிட்டதாக சில பதிவுகள் கிடைத்தன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வடிவமைத்தவர் இவர் என்றும் செய்தி கிடைத்தது.
இந்தியத் தூதராக பணியாற்றிய போது அடையாளத்துக்காக ஒரு ரூபாய் சம்பளம் பெற்றது, ஐ.நா-வில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு திறம்பட திருப்பி பதிலடி கொடுத்தது, கொரியா போர் காலத்தில் அமைதிக்காக பணியாற்றியது என பல குறிப்பிடத்தக்க பணிகளை அவர் செய்திருக்கிறார்.
நம்முடைய ஆய்வில்,
இந்த புகைப்படம் இந்தியா - சீனா போர் நடந்த போது எடுக்கப்பட்டது இல்லை என்று உறுதியாகி உள்ளது.
இந்த புகைப்படம் எடுக்கும்போது கிருஷ்ண மேனன் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லை என்பதும் தெளிவாகிறது.
படத்தில் உள்ள பெண்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் இல்லை, இவர்கள் ஸ்பெயின், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், இந்தியா - சீனா யுத்தத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் சீனப் பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார் என்று பகிரப்படும் தகவல் விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சீன பெண்களுடன் பொழுது போக்கினாரா?
Fact Check By: Chendur PandianResult: False