‘’பகுத்தறிவு பேசும் சத்யராஜின் மகள் திருமணம் பிராமணர் மந்திரம் ஓத நடந்தது,’’ என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

திருமணம் ஒன்றின் படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதின் மீது, "பெரியார் மண்ணு, தேங்காய் பண்ணு என்று வீரவசனம் பேசுற பகுத்தறிவு பகலவன் சத்யராஜ், தன் மகள் திருமணத்தை பிராமணர் தாலி மந்திரம் ஓத நடத்திய அற்புத தருணம். பகுத்தறிவு பல்லை காட்டிய தருணம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை DMK fails என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூலை 29 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பகுத்தறிவு என்றால் கடவுள் நம்பிக்கை இன்மை என்று கருதி பதிவிட்டது போல உள்ளது. கடவுள் நம்பிக்கை உள்ள பலருக்கும் பெரியாரின் கருத்து மீதும் நம்பிக்கை உள்ளது. சத்தியராஜ்க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவருடைய மகள் திவ்யா பார்க்க சத்யராஜ் போலவே இருப்பார். படத்தில் இருக்கும் பெண் சத்யராஜ் மகள் போல இல்லை. எனவே, இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

filmiinfo.comArchived Link

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இது 2012ம் ஆண்டு நடந்த திரைப்படத் தயாரிப்பாளர் எம்.ராமநாதனின் மகள் சரண்யா திருமணத்தின் போது எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. முழு புகைப்படத் தொகுப்பும் நமக்கு கிடைத்தது.

அதில், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கும் சத்யராஜை, தயாரிப்பாளர் எம்.ராமநாதன் தாலியை எடுத்துக் கொடுக்கும்படி கேட்பதும், அவர் வந்து எடுத்துக் கொடுக்க திருமணம் நடப்பதும் தெரிந்தது.

filmibeat.comArchived Link

நம்முடைய ஆய்வு சத்யராஜ் மகள் திருமணம் எப்படி நடந்தது என்பது பற்றியது இல்லை. இந்த படம் சத்தியராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்டதா என்பது பற்றி மட்டுமே. நம்முடைய ஆய்வில் படத்தில் இருக்கும் பெண் சத்யராஜ் மகள் இல்லை என்பதும், இது திரைப்பட தயாரிப்பாளர் எம்.ராமநாதன் இல்லத் திருமணத்தின் போது எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா?

Fact Check By: Chendur Pandian

Result: False