“பாஜக-வுக்கு அளிக்கப்பட்ட வாக்கு மேற்கு வங்கத்தை சுத்தம் செய்கிறது” என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal False இந்தியா | India

மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்கு அளிக்கப்பட்ட வாக்கு காரணமாக வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் கூட்டமாக அல்லது பேரணியாக மக்கள் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு போட்ட ஒத்த ஓட்டு ஒட்டுமொத்த மாநிலத்தையும் சுத்தம் செய்யுது!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் குடியேறிய வங்கதேச மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை தற்போதைய பாஜக அரசு நிறைவேற்றி வருவது போன்று பதிவிடப்பட்டுள்ளது.

இவர்கள் மேற்கு வங்கத்திலிருந்து வங்கதேசத்துக்கு செல்லும் மக்களா என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சமூக ஊடகங்கள் முழுக்க இந்த வீடியோவை தற்போது பலரும் பதிவிட்டு வருவதை காண முடிந்தது. சற்று பழைய பதிவுகளை தேடினோம். அப்போது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வெளியாகி இருந்ததைக் கண்டோம்.

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்ரல் மாதம் நடந்து மே மாதம் முடிவுகள் வெளியானது. பாஜக 2026 மே மாதம் தான் பதவிக்கு வந்தது. அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பதன் மூலம் இது பாஜக ஆட்சிக்கு பயந்து வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் வெளியேறிய வீடியோ இல்லை என்பது தெளிவானது. அந்த வீடியோவில் Hooghly Bishwa Ijtema 2026 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது என்ன என்று தேடிய போது தப்ளிக் ஜமாத் என்ற இஸ்லாமிய பிரிவு நடத்திய மத நிகழ்ச்சி என்று தெரியவந்தது.

Google Map

தொடர்ந்து தேடிய போது இந்த நிகழ்ச்சி நடந்த இடம் தொடர்பான பல செய்திகள் நமக்கு கிடைத்தன. இதன் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த பகுதியில் நெடுஞ்சாலை மேம்பாலம் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட ஸ்ட்ரீட் வியூ காட்சி நமக்கு கிடைத்தது. சாலை ஓரத்தில் ஒரு சிறிய கூடாரம் இருந்தது. அந்த கூடாரம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலும் இருந்தது. 

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டது போன்று பாஜக ஆட்சி அமைந்ததால் மேற்கு வங்கத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்கள் வெளியேறும் நிகழ்வின் வீடியோ இது இல்லை என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2026 ஜனவரி மாதம் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை எடுத்து, பாஜக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து மேற்கு வங்கம் சுத்தமாகிறது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: “பாஜக-வுக்கு அளிக்கப்பட்ட வாக்கு மேற்கு வங்கத்தை சுத்தம் செய்கிறது” என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply