
தமிழக முதல்வர் விஜய்யை கர்நாடக முதல்வர் டி.சிவக்குமார் விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.சிவக்குமார் அளித்த பேட்டியின் சிறு பகுதியை வைத்து வீடியோ பதிவு உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் விஜய் முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று டி.சிவக்குமார் கூறுகிறார். நிலைத் தகவலில், “பக்கத்து மாநில CM, விஜய் ஒரு Immatured Fellow, அவருக்கெல்லாம் ஒரு மண்ணும் தெரியாதுனு காரி துப்புறார்..
இத்தனைக்கும் அவரு கூட்டணில இருக்க கட்சிகாராரு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள விஜய்யை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.சிவக்குமார் விமர்சித்தார் என்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. தங்கள் கூட்டணியிலிருந்தாலும் கூட விஜய்யை டி.சிவக்குமார் விமர்சித்ததாகப் பதிவிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இந்த பேட்டி புதியது அல்ல. பழைய பேட்டியை எடுத்து தற்போது இருவரும் வெவ்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்ற பிறகு அளித்த பேட்டி போல பதிவிட்டுள்ளனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
டி.சிவக்குமார் அளித்த பேட்டியை சமூக ஊடகங்களில் தேடி எடுத்தோம். ஏஎன்ஐ செய்தி ஊடகம் இந்த பேட்டியை ஏப்ரல் 9, 2026 அன்று வெளியிட்டிருந்தது. அதாவது தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்திலிருந்த போது டி.சிவக்குமார் இந்த பேட்டியை அளித்திருந்தார். அப்போது அவர் கர்நாடக முதலமைச்சர் இல்லை. விஜய்யும் தமிழ்நாடு முதலமைச்சராக அப்போது இல்லை. தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அப்போது இணைந்திருக்கவில்லை.
ஏஎன்ஐ மட்டுமின்றி வேறு பல ஊடகங்களிலும் கூட ஏப்ரல் 9ம் தேதி இந்த வீடியோ வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அனைத்து செய்தி ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற பிறகுதான் தவெக-வுக்கு ஆதரவு என்ற அறிவிப்பை வெளியிட்டது காங்கிரஸ். அதன் பிறகு டி.சிவக்குமாரே கூட விஜய்க்கு தொலைபேசி மூலம் வாழ்த்து கூறி பேசியதாக கூட செய்தி வெளியாகியது.
இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை கர்நாடக முதலமைச்சர் டி.சிவக்குமார் விமர்சித்தார் என்று பரவும் வீடியோ பழையது, தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கு முன்பு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கர்நாடக துணை முதல்வராக இருந்த டி.சிவக்குமார் அளித்த பேட்டியை தற்போது தமிழ்நாடு விஜய்யை விமர்சித்த கர்நாடக முதல்வர் என்று தவறாக பகர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


