
விருது வாங்கிய விழாவில், நடிகர் விஜய் தலையில் வைத்திருந்த விக் கையோடு கழன்று வந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர் விஜய் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த விருதைக் கழற்றுவது போலவும், அப்போது அவரது தலையில் இருந்து விக் கழன்று, அவர் தலை வழுக்கையாக இருப்பது போன்றும் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Murugaraj என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 15ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகை விஜய்க்கு தலையில் முடி உள்ளதா, வழுக்கை உள்ளதா என்று சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்களுக்கும் மற்ற ரசிகர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது. நடிகர் விஜய் விக் கழன்று, அவரது கையில் இருப்பது போன்று பல ஆண்டுகளாக எடிட் செய்யப்பட்ட வீடியோ பகிரப்பட்டு வருகிறது. தற்போது மிக அதிக அளவில் அந்த வீடியோ பகிரப்படவே அது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
Behindwoods என்ற ஊடகத்தின் விருது வழங்கும் விழாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகும். எனவே, அந்த வீடியோவை தேடி எடுத்தோம். 2017ம் ஆண்டில் BehindwoodsTV யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் 4.43வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சி இடம் பெற்றிருந்தது. அதில் விஜய் விருதைக் கழற்றுகிறார். அதை அருகிலிருந்த ஒருவர் வாங்குகிறார். ஆனால், விஜய் அந்த விருதை அவரிடம் கொடுக்காமல் தானே வைத்துக்கொள்கிறார். ஆனால், அவரது தலையில் இருந்து விக் எல்லாம் கழறவில்லை. இந்த வீடியோவை எடிட் செய்து, மார்ஃபிங் செய்து போலியான வீடியோவை உருவாக்கியிருப்பது தெளிவானது.

நடிகர் விஜய் விருதைக் கழற்றும் வீடியோவை எடிட் செய்து, விருது கழற்றும் போது விக் கழன்றது போன்று போலியாக வீடியோ உருவாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திரைப்பட விருது வழங்கிய விழாவில் நடிகர் விஜய் தலையில் அணிந்திருந்த விக் கழன்றது போன்று பகிரப்படும் வீடியோ போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:விருது பெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தலையில் இருந்த விக் கழன்றதா?
Fact Check By: Chendur PandianResult: Altered
