குஜராத்தில் பா.ஜ.க வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு செருப்பு மாலை அணிவிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத்தில் பஜாக வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Rahul Gandhi next PM என்ற ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

பாஜக வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கும் இந்த வீடியோவை முன்பு பார்த்த நினைவு இருந்தது. ஆனால், குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இந்த சூழலில் குஜராத்தில் பாஜக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு என்று குறிப்பிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளதால் இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது. அவற்றை ஒதுக்கிவிட்டு செய்தி ஊடகங்களில் வந்த பதிவுகளை மட்டும் பார்த்தோம்.

இந்த வீடியோவை Zee Hindustan யூடியூப் சேனல் 2018 ஜனவரி 8ம் தேதி பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. அதில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாம்னோட் நகராட்சி தலைவர் தேர்தலின் போது பாஜக வேட்பாளர் தினேஷ் ஷர்மாவுக்கு முதியவர்கள் செருப்பு மாலை அணிவித்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive

இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், பாஜக, செருப்பு மாலை, தாம்னோட் என சில கீ வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டு வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. மேலும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த யூடியூப் வீடியோவும் நமக்கு கிடைத்தது. இதன் மூலம் இந்த வீடியோ 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ, 2018ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குஜராத்தில் பாஜக வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ 2018ல் மத்திய பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குஜராத்தில் பா.ஜ.க வேட்பாளருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply