
அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தை தவெக அரசு மூன்று மடங்காக உயர்த்தியது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கலைஞர் செய்திகள் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மூன்று மடங்கு கட்டண உயர்வு! சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது த.வெ.க அரசு!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியானதாக செய்திகள் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பல விஷயங்கள் மறைமுகமாகச் செய்யப்படுவதால் இந்த விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறிய ஆய்வு செய்தோம்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நூலகத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்ட போது, அப்படி அறிவிப்பு வெளியாகவில்லை என்றனர். ஆனால், உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதை உறுதி செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் அமைப்பு இது தொடர்பாக மறுப்பு செய்தியை வெளியிட்டது. அதில், “அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல்,’’ என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறான தகவலாகும்.
இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அளித்துள்ள விளக்கத்தில், “கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவை அரசாணை (நிலை) எண்.152 பள்ளிக் கல்வித்துறை (பொது.நூ) நாள் 04.07.2017-இன் படி குறிப்பிடப்பட்டுள்ள வாடகைக் கட்டணத்தின் அடிப்படையில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் வாடகைக்கு விடப்படுகிறது. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்தே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், மூன்று மடங்கு கட்டண உயர்வு என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்க கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


