மாணிக்கம் தாகூரை நையாண்டி செய்த சன் நியூஸ் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Altered

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூரின் பேச்சை நையாண்டி செய்யும் வகையில் சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் புகைப்படங்களை வைத்து சன் நியூஸ் வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திருப்பு அடிப்போம்.. “நாங்க பாட்டுக்கு பேசாம இருப்போம்; ஆனால், காங்கிரஸ் கட்சியை தொட்டால் திருப்பி அடிப்போம்; அது திமுக, பாஜக, அதிமுக, பாமக எண எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாக்கூர் பேச்சு” என்று இருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின் மாணிக்கம் தாகூர் பேசியதை நையாண்டி செய்யும் வகையில் சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டை வெளியிட்டிருப்பதாகப் பலரும் இந்த பதிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நியூஸ் கார்டில் உள்ள வார்த்தைகளில் எழுத்துப் பிழை உள்ளது. பார்க்க ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்டது போல் இருந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது, வெண்ணிற ஆடை மூர்த்தியின் புகைப்படம் இல்லாமல் மாணிக்கம் தாகூர் புகைப்படத்தை மட்டும் வைத்து இந்த நியூஸ் கார்டை சன் நியூஸ் ஜூன் 29, 2026 அன்று வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. இதை எடிட் செய்து மாணிக்கம் தாகூரை சன் நியூஸ் நக்கல் – நையாண்டி செய்துவிட்டது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள இந்த நியூஸ் கார்டை சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் “இது போலியானதுதான். சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை மாற்றி தவறாக பகிர்ந்திருக்கிறார்கள்” என்றார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காங்கிரஸை தாக்கினால் திருப்பி அடிப்போம் என்ற மாணிக்கம் தாகூரை நையாண்டி செய்து சன் நியூஸ் வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: மாணிக்கம் தாகூரை நையாண்டி செய்த சன் நியூஸ் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered

Leave a Reply