
கார் ஒன்றை எரிக்க முயற்சி செய்து தேச விரோத கும்பலாக மாறிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமியர் ஒருவர் கார் ஒன்றை எரிக்க முயற்சி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நிஜ கரப்பான் பூச்சியாகவே மாறிய தேச விரோத கும்பல்! #CJPExposed” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நீட் தேர்வை வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் முதல் மாணவர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் காரை எரித்து வன்முறையில் ஈடுபட்டனர் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ தொடர்பாக இந்தி ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. சில ஆங்கிலத்தில் வெளியான செய்திகளும் நமக்கு கிடைத்தன. அவற்றைப் பார்த்தபோது, இது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்று தெரியவந்தது.
அவற்றில், “இந்த சம்பவம் பீகார் மாநிலம் கயாவில் ஜூலை 16ம் தேதி நடந்தது. பாஜக கொடி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் வந்தவர் இரண்டு ஆட்டோ ரிக்ஷாக்கள் மோதி சேதம் ஏற்படுத்தினார். இதில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் கற்களை வீசி காரின் கண்ணாடிகளை உடைத்தனர். ஒருவர் காருக்கு தீ வைக்க முயற்சி செய்தார். அங்கு வந்த போலீசார் இந்த வன்முறை செயல்களை தடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் இந்த சம்பவத்திற்கும் தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பீகாரில் ஆட்டோ ரிக்ஷாக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காரை சிலர் தாக்கிய சம்பவத்தின் வீடியோ கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதாக தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


