தமிழ்நாட்டில் தேஜகூட்டணி ஆட்சி அமைந்தால் மகளிர் இலவச பஸ் ரத்து செய்யப்படும் என்று மோடி கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் மகளிர்க்கான இலவச பேருந்து பயணம் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி குறிப்பிட்ட சில டிவி ஊடகத்தினரிடம் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ் நாட்டில் NDA கூட்டணி ஆட்சி அமைந்தால் மகளிர்க்கான இலவச பேருந்து பயணம் ரத்து செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “தமிழநாட்டில் NDA கூட்டணி ஆட்சி அமைந்தால் மகளிர்கான இலவச பயணம் ரத்து செய்யபடுமாம் மோடி பேட்டி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை திட்டத்தை மாநில அரசுகள் அறிவிப்பதன் மூலம் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று நரேந்திர மோடி பேசும் வீடியோவுடன் ஃபேஸ்புக்கில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சமீபத்தில் அப்படி எந்த ஒரு பேட்டியையும் மோடி அளித்ததாக செய்தி இல்லை. ஆண்களுக்கும் கட்டணமில்லா பஸ் சேவை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள சூழலில், பெண்களுக்கு ஏற்கனவே உள்ள கட்டணமில்லா பஸ் சேவை நிறுத்தப்படும் என்று மோடி கூறியதாக பலரும் பதிவிட்டு வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றித் தேடினோம். அப்போது, 2024ம் ஆண்டு இந்தியா டுடே குழுமத்தின் ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டி அது என்பது தெரியவந்தது. 2024ம் ஆண்டில் மோடி பேசியதை 2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று மோடியே கூறியதாக பரப்பி வருவது தெரிந்தது. சரி அந்த பேட்டியில் மோடி என்ன பேசினார் என்று பார்த்தோம்.

மோடியின் பேட்டியை ஆங்கில சப் டைட்டிலுடன் இந்தியா டுடே தன்னுடைய யூடியூப் பக்கத்தில் 2024 மே 16ம் தேதி வெளியிட்டிருந்தது. அந்த பேட்டியின் 1 மணி நேரம் 21வது நிமிடத்தில் அரசியல் கட்சிகள் பெண்களைக் கவர்வதற்காக இலவசங்களை அறிவிக்கின்றனவே என்று செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு மோடி, “இது பெண்கள் பிரச்னை இல்லை. இது அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கஜானாவை காலி செய்கின்றன. இது மிக முக்கியமான பிரச்னை. எனக்கு பணத்தைத் தாராளமாக செலவழிக்க உரிமை உள்ளதா? அதிகாரமளிப்பதற்கான திட்டங்களை உருவாக்கும் உரிமை எனக்கு உள்ளது. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதை காலி செய்வேன் என்று இருக்கிறார்கள். நாம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். நீங்கள் நகரங்களில் மெட்ரோ சேவையை தொடங்குகின்றீர்கள். அந்த நகரத்திற்கு தேர்தல் வருகிறது. தேர்தலில் வெற்றி பெற பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கின்றீர்கள். இதன் மூலம் மெட்ரோ சேவையின் 50 சதவிகித பயணிகளை நீங்கள் இழந்துவிடுகின்றீர்கள். இதனால் மெட்ரோ சிறப்பாக செயல்பட முடியாது. எதிர்காலத்தில் மெட்ரோ கட்டப்படுமா இல்லையா? இதுதான் கவலை. யாரும் இந்த வழியில் சிந்திப்பது இல்லை. நாம் அரசியலுக்குள் விவாதங்கள் செய்யலாம். நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் திட்டவட்டமாகப் பேச விரும்புகிறேன்.

இதனால் என்ன ஆகிறது… நீங்கள் இலவச பஸ் திட்டத்தை அறிவிப்பதன் மூலம் போக்குவரத்தில் பிரச்னையை உருவாக்குகின்றீர்கள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்க இங்கே ஒரு மெட்ரோவையும் கொண்டு வந்தீர்கள். எப்படி அது முன்னேற்றம் அடையும்? நாடு எப்படி முன்னேற முடியும்” என்றார்.

எந்த இடத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சில மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள மகளிர் இலவச பயணத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறவில்லை. டெல்லியில் 2019ம் ஆண்டில் பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு கூட அந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை.

பிரதமரின் இந்த பேட்டி 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வெளியாகி இருந்தது. அப்போதுதான் ஆந்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது. 2025ம் ஆண்டு ஆகஸ்டில் அங்கேயும் ஶ்ரீ சக்தி என்ற பெயரில் பெண்கள் இலவச பயணத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சேவை வழங்குவதன் மூலம் அரசுக்கு, மெட்ரோ திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். எந்த இடத்திலும் அந்த திட்டத்தை ரத்து செய்வேன் என்று அவர் கூறவில்லை. மேலும், டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த திட்டம் தொடர்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் பாஜக – தெலுங்கு தேசம் கூட்டணி அரசு அம்மாநிலத்தில் இந்த திட்டத்தை புதிதாக தொடங்கியுள்ளது. 

எனவே, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்கள் கட்டணமில்லா பயணத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று மோடி கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாட்டில் தேஜகூ ஆட்சி அமைந்தால் பெண்கள் இலவச பஸ் சேவை ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி பேட்டி அளித்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தமிழ்நாட்டில் தேஜகூட்டணி ஆட்சி அமைந்தால் மகளிர் இலவச பஸ் ரத்து செய்யப்படும் என்று மோடி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply