
மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கலவரம் காரணமாக ஏராளமான வாகனங்கள், வணிக நிறுவனங்கள் தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மெக்சிகோவில் எல் மேன்சோ கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் பொது மக்கள் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மெக்சிகோவில் எல் மென்சோ” (El Mencho) என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்த அந்த நாட்டில் கலவரம் வெடித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், மெக்சிகோ கலவர பாதிப்பு என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது இந்தியாவில் நடந்தது போல் இருந்தது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2025 செப்டம்பரிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில் நேபாளத்தில் ஜென் Z போராட்டத்தின் பாதிப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நேபாள வன்முறை என்று வெளியான பல வீடியோக்கள் மிகவும் தெளிவாக இருந்தன. ஒரு வீடியோவில் வாகனத்தின் பதிவு எண் கூட மிகத் தெளிவாகத் தெரிந்தது. அந்த நம்பர் பிளேட்டை நேபாள நாட்டின் பொதுவான வாகன நம்பர் பிளேட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அது நேபாள நாட்டைச் சார்ந்த வாகனம்தான் என்பது உறுதியானது.

எல் மென்சோ என்று அழைக்கப்பட்ட மெக்சிகோ நாட்டின் போதைப் பொருள் கடத்தல்காரர் 2026 பிப்ரவரி 22ம் தேதி கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், மெக்சிகோவில் கலவரம் என்று பகிரப்படும் வீடியோவை 2025 செப்டம்பரில் நேபாளத்தில் எடுக்கப்பட்டது என்று வெளியாகி இருப்பதை உறுதி செய்துள்ளோம். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ மெக்சிகோ நாட்டைச் சார்ந்தது இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
2025 செப்டம்பரில் நேபாளத்தில் நிகழ்ந்த கலவரத்தின் வீடியோவை மெக்சிகோவில் நடந்ததாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


