லிஃப்டில் பெண் ஒருவர் இளம் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகை. பையை திருடிச் செல்வது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Youtube

யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் லிஃப்டில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகை, பணம், பை உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் செல்வது போன்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையான சம்பவம் போல் கருதி பலரும் பதிவிட்டு, கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உண்மை அறிவோம்:

குழந்தைகள் கடத்தல், திருட்டு, வன்கொடுமை உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வுக்கு என்று பலரும் வீடியோக்களை எடுத்து வெளியிடுகின்றனர். ஆனால் அந்த வீடியோக்களை சிலர் உண்மை சம்பவம் போல் எந்த ஒரு விவரமும் இன்றி சமூக ஊடகங்களில் பதிவிட்டுவிடுகின்றனர். லிஃப்டில் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் திருடப்படுவது போன்று வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவில் EYE SPOT என்ற லோகோ உள்ளது. எனவே, அப்படி ஏதேனும் யூடியூப் சேனல் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். EYE SPOT என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனல் இருப்பது தெரிந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை தேடி எடுத்தோம். 2022 ஆகஸ்ட் 14ம் தேதி இந்த வீடியோவை பதிவேற்றியிருந்தனர். வீடியோவின் தொடக்கம், முடிவு என எங்கும் இது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று குறிப்பிடப்படவில்லை.

ஆனால், வீடியோ பற்றிய குறிப்பு பகுதியில் சமூக விழிப்புணர்வுக்காக ஐ ஸ்பாட் எடுத்த வீடியோ இது. வித்தியாசமான சூழலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க ஸ்கிரிப்டட் (scripted) நாடக வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த குறும்படம் பொழுதுபோக்குக்காக மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களது யூடியூப் பக்கத்தில் இது போன்று ஏராளமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

யூடியூப் சேனல் ஒன்று வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவை உண்மை என்று கருதி பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உண்மை என்ன என்று அறியாமல் அந்த பெண்ணின் கேவலமான செயல் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இது விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்று குறிப்பிட்டிருந்தால் தவறான புரிதல் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

முடிவு:

லிஃப்டில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடம் இருந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ மக்கள் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:லிஃப்டில் பெண் செய்த கேவலமான செயல் என்று பரவும் விடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False