பிரான்சில் சாலையை மறித்து வழிபாடு செய்த இஸ்லாமியர்களைத் தூக்கி வீசும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையின் நடுவே அமர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சிலர் தரதரவென இழுத்து சாலையோரம் தள்ளிவிடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ளவர்கள் பேசுவது பிரெஞ்சு மொழி போல உள்ளது. நிலைத் தகவலில், "பெயர் மட்டுமே அமைதி மார்க்கம் . பிரான்ஸில் பொதுமக்களே நடு ரோட்டில் வழிபாடு செய்யும் முட்டாள்களை தூக்கி கடாசும் காட்சி. Forwarded தொழுகை எனும் பெயரில் போக்குவரத்தை மறித்து சாலையில் இது போன்ற அராஜகம் செய்யும் இஸ்லாமியர்களை,

வண்டியை ஏற்றிக்கொல்வது தவறில்லை என தோன்றுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Sekar G என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 23ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

சாலையை மறித்து இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தியதாகவும் அவர்களைத் தூக்கிக் கடாசினார்கள் என்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால், வீடியோவில் உள்ளவர்கள் தொழுகை நடத்துவது போல இல்லை. சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவது போல உள்ளது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: yenicaggazetesi.com.tr I Archive

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது டிசம்பர் 1, 2022ல் வெளியான சில பிரெஞ்சு மொழி செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், பருவகால மாறுதல் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வாகனவோட்டிகள் சாலையோரம் இழுத்துப் போட்டு சென்றனர் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இஸ்லாமியர்கள் சாலையின் நடுவில் தொழுகை நடத்தினர் என்ற தகவல் தவறானது என்பது உறுதியானது.

தொடர்ந்து தேடிய போது 2022 டிசம்பர் 2ம் தேதி இந்த வீடியோவை சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தனர். அதில், காலநிலை மாற்றம் பிரச்னைக்காக முற்றுகையிட்டவர்கள் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத வகையில் போராட்டம் நடத்தியதால் அவர்களை பொது மக்கள் வலுக்கட்டாயமாக அகற்றினர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: express.co.uk I Archive

பருவநிலை மாறுபாடு தொடர்பாக போராட்டங்களை மேற்கொண்டவர்களை பாரீஸ் நகர வாகன ஓட்டிகள் சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர் என்று குறிப்பிட்டு இங்கிலாந்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதன் மூலம் பிரான்சில் சாலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர் என்று பரவும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரான்சில் நடு ரோட்டில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதாகவும் அவர்களை மக்கள் அப்புறப்படுத்தினார்கள் என்றும் பரவும் வீடியோ தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரான்சில் சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False