திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு என்று பரவும் சன் டிவி நியூஸ் கார்டு உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

தமிழ்நாட்டின் கடந்த ஐந்து ஆண்டு சட்டம் ஒழுங்கு என்று குறிப்பிட்டு சன் நியூஸ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்களுடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சட்டம் ஒழுங்கு கடந்த 5 ஆண்டுகளில்… 8900 கொலைகள், 3729 இரட்டைக் கொலைகள், 20000+ பாலியல் குற்றங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் என்று கூறி ஆட்சிக்கு வந்தது தமிழக வெற்றிக் கழகம். ஆனால், வந்த நாளில் இருந்து சிறிதும் பெரிதுமான குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் முந்தைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தி.மு.க நிர்வாகியின் தொலைக்காட்சியில் தி.மு.க-வை விமர்சிக்கும் வகையில் பதிவுகள் வராது. உங்கள் ஆட்சி மட்டும் ஒழுங்கா என்று கேட்கும் வகையில் சன் டிவி பெயரில் போலியான நியூஸ் கார்டை உருவாக்கி த.வெ.க-வினர் பரப்பி வருவதை காண முடிகிறது. இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

முதலில் இதில் உள்ள புள்ளி விவரம் எல்லாம் சரியா என்று அறிய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) தரவுகளை பார்த்தோம். 2024ம் ஆண்டு வரையிலான தரவுகள் அதில் இருந்தன. 2025ம் ஆண்டுக்கான தரவுகள் இல்லை. 2026ம் ஆண்டுக்கு இப்போதுதான் ஐந்தாவது மாதமே நடக்கிறது. எனவே, இந்த மே மாதம் வரையிலான தகவல் எங்கிருந்து பெற்றார்கள் என்று தெரியவில்லை.

2025ம் ஆண்டு கொலை மற்றும் குற்றங்கள் தொடர்பாக அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க அரசே தகவல் வெளியிட்டிருந்தது. 2025ம் ஆண்டு 1461 கொலைகள் நடந்துள்ளதாக அப்போது உள்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் தெரிவித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்திருந்த பேட்டியில் கூட கடந்த ஐந்து ஆண்டுகளில் 8900 கொலைகள் நடந்தது என்று கூறியிருந்தார். 2021ம் ஆண்டில் நிகழ்ந்த கொலை என்பது 4 மாத அ.தி.மு.க ஆட்சியையும் சேர்த்தே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரத்தை எடுத்து இவர்கள் பதிவிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் முந்தைய ஆண்டு பதிவுகளை பார்க்கும் போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக தமிழ்நாட்டில் 1400 – 1600 வரையிலான கொலை சம்பவங்கள் நடப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாடுதான் முன்னிலை வகிக்கின்றதா என்று பார்த்தால் அப்படியும் இல்லை. மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் என பல மாநிலங்கள் இதை விட அதிக அளவில் கொலை குற்றங்கள் பதிவாகி இருந்ததை காண முடிந்தது. எனவே, புள்ளி விவரம் சரியாக இருக்கலாம். இதை சன் நியூஸ் தான் வெளியிட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.

சன் நியூஸ் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு எதையும் அந்த ஊடகம் வெளியிடவில்லை என்பது தெரிந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டை சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியின் போது சட்டம் ஒழுங்கு நிலை என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியின் போது சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு என்று பரவும் சன் டிவி நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply