ஜெஃப்ரி எப்ஸ்டீன் இஸ்ரேலில் உயிருடன் இருக்கிறார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Altered அரசியல் சார்ந்தவை | Political சர்வதேசம் | International

அமெரிக்காவின் குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் இஸ்ரேலில் உயிருடன் வசித்து வருகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமெரிக்காவின் குழந்தை பாலியல் குற்றவாளியான இறந்து போன ஜெஃப்ரி எப்ஸ்டீன் நடந்து செல்வது போல் ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எனக்கு_அப்பவே_சந்தேகம்_இருந்தது…. #மரண_வியபாரி ..!! “#ஜெஃப்ரி_எப்ஸ்டீன்” #உயிருடன் இஸ்ரேலின் “டெல் அவிவ்” தெருக்களில் சுற்றித் திரிகிறான், மேலும் இஸ்ரேல் 2019 முதல் அவரது மரணத்தை போலியாக சித்தரித்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சினிமாவையே மிஞ்சும் வகையில் நடக்கும் சம்பவங்கள்.அதிர்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் வௌியாக அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்க சிறையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் உயிருடன் இஸ்ரேல் நாட்டில் வசித்து வருவதாக ஒரு புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி சிறை அறையில் இறந்து கிடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் இறந்த உடன் அது தொடர்பாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எப்ஸ்டீன் உடலை புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை எல்லாம் அமெரிக்கா வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், அவர் உயிருடன் இருக்கிறார் என்று புகைப்படம் பரவுவதைப் பார்க்கும் போது, அது போலியானதாக இருக்கலாம் அல்லது பழைய புகைப்படமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தை முதன் முதலாக reddit.com தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அவர் ஏஐ பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்கி தொடர்ந்து reddit.com தளத்தில் பதிவிட்டு வந்திருப்பதையும் காண முடிந்தது. காந்தியடிகள் கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் இருப்பது போல், பாடிபில்டர் போல இயேசு இருப்பது போல் என ஏராளமான ஏஐ புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். 

உண்மைப் பதிவைக் காண: reddit.com I Archive

மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை ஜெமினி ஏஐ மூலம் உருவாக்கியதாகவும் அந்த பதிவாளர் குறிப்பிட்டிருந்தார். அது தவறி வேறு பல ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புகைப்படங்களையும் அவர் ஏஐ மூலம் உருவாக்கி பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. அந்த reddit.com பதிவர் வௌயிட்டிருந்த புகைப்படத்தில் கீழே ஜெமினி ஏஐ லோகோ இருந்ததையும் காண முடிந்தது. 

இந்த புகைப்படத்தை உருவாக்கியவரே இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று கூறிவிட்டாலும், அதை உறுதி செய்துகொள்ள தொடர்ந்து ஆய்வு செய்தோம். புகைப்படத்தை ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டதா என்று கண்டறிய உதவும் thehive.ai உள்ளிட்ட சில இணையதளங்களில் பதிவேற்றித் தேடினோம். அவை அனைத்துமே இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்தன.  இதன் மூலம் இந்த புகைப்படம் உண்மையானது இல்லை என்பது உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2019ம் ஆண்டு இறந்ததாக கூறப்படும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தற்போது இஸ்ரேலில் உயிருடன் இருப்பதாக பரவும் புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

Avatar

Title:ஜெஃப்ரி எப்ஸ்டீன் இஸ்ரேலில் உயிருடன் இருக்கிறார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: Altered