FACT CHECK: மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட சாலை- புகைப்படம் உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

பாலைவனத்தின் நடுவே இருந்த ஒற்றை மரத்தை வெட்ட மனம் இல்லாமல் அதை சுற்றி சாலை அமைத்தது போன்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

FB Claim Link I Archived Link

பாலைவனத்துக்கு மத்தியில் ஒரு மரம் இருப்பது போன்றும், அந்த மரத்தை வெட்டாமல் அதன் அருகில் சாலை அமைக்கப்பட்டிருப்பது போன்றும், மரத்தின் நிழலில் கழுதை அல்லது குதிரை நிற்பது போலவும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது எத்தனை பேருக்கு பிடிக்கும் 👌👌👌.. அந்த மரத்தை நினைச்சு ரோடு போட்ட அந்த மனசு தான் கடவுள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை JSri Sathish என்பவர் 2021 ஜூன் 13ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மரத்தின் முக்கியத்துவத்தை இந்த படம் உணர்த்துகிறது. இருப்பினும் இந்த படம் உண்மையானதுதானா, எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தின் சில தகவல்கள் இந்த படம் உண்மையானதாக இருக்காது, எடிட் செய்யப்பட்ட படமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

1) அணிவகுத்து வரும் வாகனங்களின் நிழலைப் பார்த்தால் காலை அல்லது மாலை நேரத்தில் எடுத்தது போல உள்ளது. 

2) கழுதை / குதிரையின் நிழல் விழாமல் உள்ளது. 

3) ஆனால், மரத்தின் நிழல் விழுவதைப் பார்த்தால் படம் உச்சி வேளையில் எடுக்கப்பட்டது போல உள்ளது.

அவ்வளவு பெரிய சாலையில் வளைவு பகுதியில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது. நெடுஞ்சாலையில் வேகமாக வருபவர்கள் சாலை வளைவு பற்றி எந்த அறிவிப்பு, எச்சரிக்கையும் இல்லை என்றால் நேராக இறங்கி மரத்தில் மோத வாய்ப்பு அதிகம். எனவே, இந்த படம் உண்மையானது போலத் தெரியவில்லை.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2011ம் ஆண்டிலிருந்து பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருவதை காண முடிந்தது. எல்லா பதிவுகளும் மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பதிவாகவே இருந்தன. பலரும் இது உண்மைப் படம் என்ற வகையில் குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும் நம்முடைய சந்தேகத்துக்கு யாரும் பதில் அளித்ததாக இல்லை.

நீண்ட தேடலுக்குப் பிறகு இந்த புகைப்படம் பற்றி skeptics.stackexchange.com என்ற இணையதளம் அலசி ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டிருப்பது நமக்கு கிடைத்தது. அதில், இந்த புகைப்படத்தை கெட்டி இமேஜில் வெளியான அமெரிக்க நெடுஞ்சாலை ஒன்றின் படத்தில் இருந்து எடிட் செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: gettyimages.in I Archive

கெட்டி இமேஜ் வெளியிட்டிருந்த பதிவைப் பார்த்தோம். அதில் சாலை நேராக இருந்தது. நான்கு கார்கள் அணிவகுத்துச் செல்கின்றன. முன்னாள் ஒரு லாரி செல்கிறது. படத்தில் பல இடங்களில் பாலைவன தாவரங்கள், சற்று சிறிய அளவிலான மரங்கள் இருப்பதைக் காண முடிந்தது. கெட்டி இமேஜஸ் படத்தில் அணிவகுத்து செல்லும் கார்கள் அப்படியே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் இருப்பதை காண முடிந்தது. அதுவும் அதே சீரான இடைவெளியில். மேலும், கெட்டி இமேஜஸில் இந்த படத்துடன் இதே இடத்தில் எடுக்கப்பட்ட மேலும் பல படங்களை பகிர்ந்திருந்தனர். மரத்துக்காக சாலையை வளைத்து அமைத்திருந்தால் அதை கட்டாயம் வெளியிட்டிருப்பார்கள். ஆனால், அதில் அப்படி எந்த படமும் இல்லை.

கெட்டி இமேஜஸ் வெளியிட்ட படத்தைத் தான் எடிட் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த புகைப்படம் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள கிராம சாலை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. சாலை எண் 160 என்று குறிப்பிட்டிருந்தனர். கெட்டி இமேஜ் புகைப்படம் அடிப்படையில் கூகுள் மேப்பில் அந்த இடத்தின் படத்தையும் அவர்கள் பகிர்ந்திருந்தனர். அந்த சாலை நேராக இருப்பதையும் அந்த பகுதியில் பாலைவன மரங்கள் வளர்ந்திருப்பதையும் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Google Maps I Archive

இதன் மூலம் பாலைவனத்தில் வளர்ந்த ஒரே ஒரு மரத்தை வெட்ட மனமின்றி அதைச் சுற்றி சாலை அமைத்த பொறியாளர்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

மரத்தை வெட்டாமல் அதனை சுற்றிக்கொண்டு செல்லும் வகையில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது போன்று பகிரப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட சாலை- புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered