விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவு என்று கம்யூனிஸ்டுகள் அறிவித்தார்களா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

ஆட்சி அமைக்க அழைத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

விஜய் அழைத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

பாலிமர் செய்திகள் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவு செய்வோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த செய்தியை பாலிமர் டிவி வெளியிட்டிருப்பது அதன் சமூக ஊடக பக்கங்களில் வெளியான பதிவுகள் மூலம் உறுதியாகிறது. ஆனால் இந்த செய்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துள்ளது.

மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவாலயத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், “தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்தலை எதிர் கொண்டோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். இதற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றியைத் தெரிவித்தோம். கூட்டணி ஆட்சி தொடர்பாக தவெக எந்த அழைப்பையும் விடுக்கவில்லை. கூட்டணி ஆட்சி தொடர்பாக தவெக தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், எங்கள் தரப்பிலிருந்து என்ன கருத்து, என்ன நிலைப்பாடு என்று கேட்பதென்பதே பொருத்தமானதாகப் படப்படவில்லை” என்று கூறினார்.

அழைப்பு விடுத்தால் என்ன செய்வீர்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சண்முகம், “இது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க சட்டப்பூர்வ உரிமை பெற்றவர்கள் அவர்கள். அவர்கள்தான் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாலிமர் டிவியில் கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவு என்று சண்முகம் கூறியதாக செய்தியை வெளியிட்டுள்ளனர். பாலிமர் வெளியிட்டிருந்த செய்தியை பார்த்தோம். தனி பேட்டி எடுத்தது போன்று வீடியோ வெளியிட்டிருந்தனர். ஆனால், அவர் என்ன பேசினார் என்று அதில் ஆடியோவை வெளியிடவில்லை. சண்முகம் இவ்வாறு கூறினார் என்று செய்தியாளர் ஒருவர் விளக்கிப் பேசுவது போன்று அந்த வீடியோ இருந்தது.

இப்படி ஏதும் பேட்டி அளித்துள்ளாரா, அது தொடர்பான செய்தி ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். இது தவறான செய்தி என்று சண்முகம் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவு தான் கிடைத்தது. பாலிமர் வெளியிட்டிருந்த செய்தியையே மறுபதிவாகப் போட்டு அதில், “இன்று பாலிமர் தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். 

Archive

நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பெரும்பான்மையை நிரூபிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை விஜய் கேட்கலாம்… அல்லது வேறு கட்சியின் ஆதரவை கேட்கலாம். ஒருவேளை விஜய் ஆதரவு கேட்டால் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய இயக்க நடைமுறைபடி விவாதித்தே முடிவெடுக்கும் சூழல் வரலாம். ஆனால் இன்றைக்கு அப்படி ஒரு கருத்தை சிபிஐ-எம் கட்சி வெளிப்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாக பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவு என்று கம்யூனிஸ்டுகள் அறிவித்தார்களா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply